'இன்றைய தமிழ்நாட்டின் ஒவ்வொரு செங்கல்லிலும் அவர் பெயர் உள்ளது'...! - கலைஞர் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் உருக்கமான பதிவு!
His name on every brick Tamil Nadu today Chief Minister Stalin heartfelt post artist death anniversary
தமிழக அரசியல் வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த முன்னாள் முதல்-அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்டகால தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 8-வது நினைவு நாள் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் மரியாதையுடன் அனுசரிக்கப்படுகிறது.
1924-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்த கலைஞர் கருணாநிதி, தனது இளமைக் காலத்திலேயே அரசியல், இலக்கியம், சமூகச் சீர்திருத்தம் ஆகிய துறைகளில் தடம் பதித்தார். 1957 முதல் 2018 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அவர், சுமார் 40 ஆண்டுகள் தி.மு.க.வின் தலைவராகவும், ஐந்து முறை தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும் பொறுப்பு வகித்து மக்கள் நலத் திட்டங்கள் மூலம் தனித்துவமான ஆட்சியை வழங்கினார்.

2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி இயற்கை எய்திய அவரின் நினைவை முன்னிட்டு, தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தி நினைவுகூர்ந்து வருகின்றனர்.கலைஞரின் நினைவு நாளையொட்டி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற அமைதிப் பேரணி இன்று காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலையிலிருந்து தொடங்கியது.
பின்னர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்திற்குச் சென்ற மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து ஆழ்ந்த மரியாதை செலுத்தினார்.கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,"
அவர்தான் நமக்கு எல்லாம்
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!" என்று குறிப்பிட்டுள்ளார்.இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக இருக்கிறது.
English Summary
His name on every brick Tamil Nadu today Chief Minister Stalin heartfelt post artist death anniversary