தமிழக பட்ஜெட் 2026-27; கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இருமடங்காக உயர்ந்துள்ள கடன்..? அரசின் வருவாய் கூட்டும் முன்முயற்சிகள் குறித்து நிதியமைச்சர் விவரிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்​ஜெட்​, தமிழக சட்டப்பேரவையில் நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் தாக்கல் உரை நிகழ்த்தினார். தனது பட்ஜெட் உரையில், தமிழகத்தின் கடன் சுமை குறித்து அவர் விளக்கமளித்ததோடு, அதேநேரத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

பட்ஜெட் தாக்கல் செய்து ஒவ்வொரு துறைக்குமான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவித்தார். அதன்பின்னர் உரையின் உறுதியில் தவெக அரசின் வருவாய் கூட்டும் முன்முயற்சிகள் குறித்து விளக்கமளித்து தனது உரையில் கூறியதாவது; 

''தமிழ்நாட்டின் கடன் அளவானது கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இருமடங்காக உயர்ந்து பத்து லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருப்பதனை, நமது அரசு ஆட்சி அமைத்த உடன் வெளியிட்ட நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தினோம்.

மேலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சொந்த வரி வருவாயின் விகிதம், வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என பல்வேறு நிதிநிலைக் குறியீடுகளில், தமிழ்நாடு மற்ற இணை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. மொத்த வரி வருவாயில் வட்டி செலுத்துவதற்கான தொகையும், பொறுப்பேற்றுக்கொண்ட செலவுகளும், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதன் காரணமாக, புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு கிடைக்கும் நிதி ஆதாரம் என்பது குறைவாகவே உள்ளது. இத்தகைய ஓர் இக்கட்டான சூழ்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது அரசானது, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றும் அதே வேளையில், மாநிலத்தினை இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

முதலாவதாக, பொது டெண்டர்களில் காண்டிராக்டர்களிடம் கேட்கப்படும் தேவையற்ற சான்றிதழ்களின் கட்டாய சமர்ப்பிப்பு, அந்த டெண்டர்களை போட்டியில்லாதவாறு மாற்றியுள்ளன. இதனைக் களைந்து நமது அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது.

இரண்டாவதாக, அரசுத் துறைகளில், அந்தத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட காண்டிராக்டர்கள் மட்டுமே டெண்டர்களில் பங்கேற்க முடியும் என்றிருந்த நிலையை மாற்றி எந்த ஒரு துறையிலும் பதிவு செய்துள்ள காண்டிராக்டர் எவரும், தகுதியிருப்பின் மற்ற துறைகளின் டெண்டர்களிலும் பங்கேற்க முடியும் என்ற நிலையை அரசு கொண்டு வந்துள்ளது.

மூன்றாவதாக, இளைஞர்களும், சிறுதொழில் செய்பவர்களும் அரசின் டெண்டர்களில் முதன்முறையாகப் பங்கேற்க ஏதுவாக, குறைந்த மதிப்புள்ள டெண்டர்களில் உள்ள பல்வேறு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள், புதிய மற்றும் வளர்ந்து வரும் காண்டிராக்டர்களுக்கு அரசின் டெண்டர்கள் எளிதில் கிடைக்க வழிவகுக்கும்.

அதே நேரத்தில், டெண்டர்களில் ஏற்படும் ஆரோக்கியமான போட்டியின் காரணமாக அரசின் வீண் செலவுகளும் குறையும். இந்த முன்முயற்சிகளின் பலன்கள் அனைத்தும் அரசிற்கு கிடைக்கப் பெற தொடங்கிவிட்டன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது அரசு பொறுப்பேற்பதற்கு முன், டெண்டர்களின் மதிப்பீடுகளில் ஒரு பெரும்பகுதி சில தனிநபர்களுக்கும். சில கட்சிகளுக்கும் செல்வதை முழுமையாகத் தடுத்து நிறுத்தி, ஒப்பற்ற சாதனையை நமது முதல்வர் செய்திருக்கிறார். 

மேலும், பல அடுக்கு மற்றும் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்ட அனுமதியினைப் பெற அரசிடம் வர வேண்டும் என்ற நிலையையும் முதல்வர் விஜய் மாற்றியுள்ளார்.

இந்த அனுமதியினை அதிகாரப் பகிர்ந்தளிப்பின் மூலம் (Delegation of Powers) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிலையிலேயே பெற்றுக் கொள்ள ஆணையிட்டுள்ளார். இதன் மூலம். திட்ட அனுமதியினைப் பெறுவதற்கு நிலவி வந்த ஊழலை முற்றிலுமாக அகற்றியுள்ளார்.

மக்களின் வரிப் பணத்தில் இருந்து ஒரு பைசாவும் தொட மாட்டோம். தொட விடமாட்டோம், தொட்டால் விடமாட்டோம். இதற்கு முன் தொட்டவர்களையும் விடமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் நமது முதல்வரைக் கண்டாலே, அவரின் பெயரைக் கேட்டாலே, ஊழல்வாதிகள் அஞ்சி நடுங்கி ஓடி ஒளிவதை நாம் தினந்தோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இவ்வாறு பொது டெண்டர்கள் மற்றும் திட்ட அனுமதிகளில் நேர்மையான மற்றும் வெளிப்படைத் தன்மை உடை நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ள நமது அரசு, வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவதற்கான முன்முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இவற்றின் ஒருபகுதியாக மதுபான உற்பத்தியாளர்களுக்கான கூடுதல் சிறப்புக் கட்டணத்தை அரசு அண்மையில் விதித்துள்ளது.

இதன்மூலம், அரசுக்கு ஓர் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை வரவு எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, சரக்கு மற்றும் சேவை வரிகளில் நேரடித் தொடர்பற்ற மதிப்பீடு, பதிவுத்துறையில் நேரடித் தொடர்பற்ற பத்திர பதிவு, சுரங்க நடவடிக்கைகளைக் கண்காணிக்க முழுமையான கணினிமயமாக்கல் என தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல முன்னெடுப்புகளை அரசு எடுத்து வருகிறது.

இதன் மூலம் அரசிற்கு கூடுதலாகக் கிடைக்கும் வருவாய் ஏறத்தாழ 15,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பல வெற்றித் திட்டங்களை செயல்படுத்த முடியும்.

பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து செல்லக்கூடிய வருவாய் வளர்ச்சியை அடையவும். வருவாய் ஆதாரங்களை விரிவுபடுத்தி, நிலைத்தன்மையுடன் பராமரிக்கவும், மாநிலத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக, ஒன்றிய திட்ட ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட வருவாய் மேம்பாட்டுக் குழுவை அரசு அண்மையில் அமைத்துள்ளது.

இதன் மூலம், மாநிலத்தின் நிதி சுயாட்சியை வலுப்படுத்தி, அதன் சமூகப் பொருளாதார வளர்ச்சிக் கடமைகளை நிறைவேற்றத் தேவையான நிதி ஆதாரங்களை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்.'' என நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்றைய சட்டப்பேரவையில் இறுதி நேர உரையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Finance Minister wilson explanation on the governments revenue raising initiatives in the Tamil Nadu Budget 2026


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->