அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி விடுத்த அதிரடி எச்சரிக்கை...! திருச்சி மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கசிந்த பரபரப்புத் தகவல்கள்...!
Edappadi Palaniswami sharp warning AIADMK executives Sensational information leaked from Trichy district advisory meeting
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, தேர்தல் தோல்விக்குப் பிறகான கட்சி மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால அரசியல் செயல்திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, கட்சியின் வாக்கு நிலவரம், நிர்வாக அமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள், தொண்டர்களின் செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதன்படி, நேற்று ராணிப்பேட்டை கிழக்கு, ராணிப்பேட்டை மேற்கு, திருப்பத்தூர், திருவள்ளுவர் வடக்கு மற்றும் திருவள்ளுவர் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் உரையாற்றியபோது, "கட்சிக்கு துரோகம் செய்து விலகிச் செல்பவர்களைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை.
அ.தி.மு.க. என்பது தொண்டர்களின் உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் உருவான இயக்கம். இதை எந்த சக்தியாலும் சிதைக்க முடியாது. இந்த இயக்கத்தை பலவீனப்படுத்த முயன்றவர்கள் அரசியல் வரலாற்றிலேயே நிலைத்து நிற்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியில் இருந்து தொண்டர்கள் விரைவாக மீண்டு, புதிய உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும்.
இனி நடைபெறவுள்ள தேர்தல்கள் நமக்கான வாய்ப்பாக அமையும்; வெற்றி நிச்சயம் நமதே" என்று உற்சாகமூட்டும் வகையில் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தொடர் ஆலோசனையின் அடுத்த கட்டமாக, இன்று திருச்சி மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
முதற்கட்டமாக, திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெறும் கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், தோல்விக்கான காரணங்கள், எதிர்கால தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் த.வெ.க.வில் இணைந்து வருவது கட்சிக்கு சவாலான சூழலை உருவாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்தப் பின்னணியில், மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து, அவர்களுக்கு நம்பிக்கையையும் புதிய உற்சாகத்தையும் அளிக்கும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Edappadi Palaniswami sharp warning AIADMK executives Sensational information leaked from Trichy district advisory meeting