எடப்பாடி தொகுதி அதிமுகவின் ‘எஃகு’ கோட்டை! வரலாறே சொல்கிறது…இங்கு எப்போதும் அதிமுகவின் ஆட்டம் தான்!கடந்து வந்த பாதை!
Edappadi constituency is the steel stronghold of AIADMK History tells usit has always been AIADMK game here The path it has taken
தமிழ்நாட்டின் முக்கிய நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக விளங்குவது சேலம் மாவட்டத்தின் எடப்பாடி தொகுதி. அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண் என்பதாலும், இந்த தொகுதி அரசியல் ரீதியாக அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு இருந்து வரும் பழமையான தொகுதிகளில் ஒன்றான எடப்பாடி, பல மறுசீரமைப்புகளையும் கடந்து தொடர்ந்து அரசியல் முக்கியத்துவத்தை தக்க வைத்துள்ளது. இந்த தொகுதி வரலாற்றைப் பார்த்தால், இது பெரும்பாலும் அதிமுகவின் வலுவான கோட்டையாகவே இருந்து வந்துள்ளது.
காங்கிரஸ் இந்த தொகுதியில் வென்றது வெறும் இரண்டு முறை மட்டுமே – 1952 மற்றும் 1984. அதேபோல், திமுகவும் 1967 மற்றும் 1971 ஆகிய இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு இந்த தொகுதியில் திமுகக்கு வெற்றி கிடைக்கவில்லை.
பாமக மட்டும் 1996, 2001, 2006 ஆகிய மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்த தொகுதியின் உண்மையான ஆதிக்கம் அதிமுகவுக்கே சொந்தம். 1977 முதல் 2021 வரை மொத்தம் 7 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் இந்த தொகுதியில் 7 முறை போட்டியிட்டு, 5 முறை வெற்றி பெற்றுள்ளார். 1996 மற்றும் 2006 தேர்தல்களில் மட்டுமே அவர் தோல்வியடைந்தார்.
2016 தேர்தலில் சுமார் 98,700 வாக்குகள் பெற்று பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ், 2021ல் முதல்வராக போட்டியிட்டபோது தனது ஆதிக்கத்தை மேலும் நிரூபித்தார். அப்போது அவர் 1.63 லட்சம் வாக்குகள் பெற்று, சுமார் 93 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
அவரது தொகுதியில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கிராம சாலைகள், புறவழிச் சாலை, அரசு மருத்துவமனை, பாலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற அடிப்படை வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களிடையே அவருக்கு எதிர்ப்பு குறைவாகவே உள்ளது எனக் கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் திமுக சார்பில் காசி, நாம் தமிழர் கட்சி சார்பில் பிரியதர்ஷினி ஆகியோர் இபிஎஸுக்கு எதிராக களம் காண்கிறார்கள். இருப்பினும், வரலாறு, வாக்கு வங்கி மற்றும் உள்ளூர் ஆதரவு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்தால், எடப்பாடி தொகுதியில் மீண்டும் அதிமுக வெற்றி பெறும் வாய்ப்பே அதிகம் என அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
எடப்பாடி தொகுதி முடிவு, இந்த தேர்தலில் அதிமுகவின் மொத்த நிலைப்பாட்டுக்கும் ஒரு முக்கிய குறியீடாக இருக்கும் என்பது உறுதி.
English Summary
Edappadi constituency is the steel stronghold of AIADMK History tells usit has always been AIADMK game here The path it has taken