'திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது எங்கள் துரதிர்ஷ்டம்'; திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற பின் துரை வைகோ பேட்டி..! - Seithipunal
Seithipunal


பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்துள்ள நிலையில், இன்று அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சி சென்றுள்ளார்.

விஜய் முதல்வராக பதவியேற்றப்பின் முதன்முறையாக திருச்சிக்கு வருவதால் அங்கு அவரை வரவேற்பதற்காக தவெகவினர் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகளை செய்தனர். 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதோடு, முதல்வரின் வருகையினால் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று மதியம் 02.45 மணியளவில் திருச்சி விமான நிலையத்துக்கு சென்றடைந்த முதல்வர் விஜய்யை, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வரவேற்றார். துரை வைகோ திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவின் முக்கிய தலைவரான துரை வைகோ முதல்வர் விஜய்யை வரவேற்றுள்ளமை பேசும் பொருளாகியுள்ளது.

விஜய் முதல்வரான பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதன்பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில், துரை வைகோ விஜய் குறித்து பாசிட்டிவாகவே பேசி வருவதோடு, தவெகவும் ஒரு திராவிட இயக்கம் தான் எனவும் கூறிவருகிறார்.

முதல்வர் விஜய்யை வரவேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ பேசியதாவது;

முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் விஜய் முதன்முறையாக திருச்சிக்கு வருகை தந்துள்ளார். அதனால், இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராக நான் அவரை வரவேற்றதாகவும், அடுத்த சில நாட்களில் முதல்வரை சந்திக்கும் போது திருச்சி தொகுதியின் கோரிக்கைகளை வலியுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், எங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் துரதிர்ஷ்டவசமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம், அதனால் எங்களால் தவெக அரசுக்கு ஆதரவளிக்க முடியாத சூழல் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், எங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற ஜனநாயக சக்திகள் தவெகவுக்கு ஆதரவளித்துள்ளன. அதனை நாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் தவெகவை தனிப்பெரும் கட்சியாக ஆக்கியுள்ளனர். அதனை மதிக்க வேண்டும் என்றும், ஆறு மாத காலம் இந்த ஆட்சியின் செயல்பாடுகளை பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மதிமுக எந்தக் கூட்டணியில் தொடர்வது என்பது குறித்து ஜூன் 27-இல் நிர்வாகக் குழுவை கூட்டியுள்ளதாகவும், அதில் நிர்வாகிகள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் எந்த கூட்டணியில் இடம்பெறுவது என முடிவெடுப்போம் என்று அறிவித்துள்ளார்.

மேலும், ஒரு கட்சியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மற்ற கட்சிக்கு செல்வது ஜனநாயக உரிமை என்றும்,  திருச்சி விமானநிலைய ஓடுதள விரிவாக்கம் குறித்து டெல்லியில் அதிகாரிகளை சந்தித்து, நிதியை வழங்கும்படி கோரிக்கை வைத்துள்ளதாகவும் துறை வைகோ தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Durai Vaiko gives an interview after welcoming Chief Minister Vijay in Trichy


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->