காந்தி பிறந்த மண்ணில் கலைக்கொடி நாட்டிய பாட்டாளி கலைஞன் சிவா - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மகாத்மா காந்தி அவதரித்த குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற  தேசிய அளவிலான சிற்பக் கலைப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த  சிற்பக் கலைஞர் சிற்பி சிவா எனப்படும் சிவக்குமார் மிகச்சிறப்பான சிற்பத்தை படைத்து முதல் பரிசு வென்றிருக்கிறார்.

சிற்பி சிவாவின் கல்வியில் தொடங்கி அவரது அனைத்து நிலை வளர்ச்சியையும் ஊக்குவித்தவன் என்ற முறையில் அவரது இந்த வெற்றியில் நான் பெருமை கொள்கிறேன்.

குஜராத் மாநில கலை மற்றும் கலாச்சாரத் துறையின் சார்பில் அம்மாநிலத்தின் அம்பாஜி நகரத்தில் ஷில்போத்சவ் என்ற தலைப்பில் தேசிய அளவிலான இரண்டாவது சிற்பக்கலைப் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டிக்கு தமிழ்நாட்டிலிருந்து சிற்பி சிவாவுக்கு மட்டும் தான் அழைப்பு வந்தது. பன்னாட்டு அளவிலான போட்டிகளில் வெற்றிகளை குவித்திருந்ததால்  அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகம், குஜராத், பஞ்சாப், ஹரியானா, தில்லி, சண்டிகர், உத்தரப்பிரதேசம்,  மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 18 சிற்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.அவர்கள் அனைவருக்கும் பல்வேறு தலைப்புகளில் சிற்பங்களைப் படைக்க  ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 8 வரை மொத்தம் 20 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சிற்பங்களை படைத்த நிலையில், அவற்றிலிருந்து சிற்பி சிவா உருவாக்கிய சிவன் - பார்வதி - லிங்கம்  சிற்பத்திற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

ஒவ்வொருவருக்கும் சிற்பம் செய்ய 20 நாட்கள் வழங்கப்பட்ட நிலையில் சிற்பி சிவா 15 நாட்களில் செய்து முடித்திருக்கிறார். அம்பாஜியில் நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் சிற்பி சிவாவுக்கு  குஜராத் மாநில கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜக்தீஷ் பாஞ்சல் பரிசு வழங்கி பாராட்டினார்.

அப்போது பேசிய அமைச்சர் பாஞ்சல்,’’சிவன் - பார்வதி - லிங்கம்  சிற்பம் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் உள்ளது. சிவாவின் சிற்பக் கலைத் திறன் வியக்க வைக்கிறது. குஜராத் அரசின் சார்பில் நடத்தப்படவுள்ள மூன்றாவது சிற்பக் கலைப் போட்டிக்கும் அவரை அழைப்போம். குஜராத் மாநில சிற்பக் கலை வளர்ச்சிக்கு அவரது சேவையை பயன்படுத்திக் கொள்வோம்” என்று பாராட்டினார்.

சிற்பி சிவாவை அவர் சிறுவனாக இருந்த போதிலிருந்தே நான் அறிவேன். அவரை உயர்கல்வி கற்க வைத்தவர் என்ற முறையில் நான் பெருமையடைகிறேன். கல்விக் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மாவீரன் குரு சிலையை சிற்பி சிவா தான் உருவாக்கினார். தைலாபுரம் தோட்டத்தில் பொங்கல் நாளையொட்டி  கரும்புக் குடில், கரும்பு சிற்பம் ஆகியவற்றை ஆண்டு தோறும் அமைப்பவர் சிவா தான்.

தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் ஏராளமான பரிசுகளை வென்றுள்ள சிற்பி சிவா இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்!

இவ்வாறு மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Wish Sirpi Siva


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->