காவிரி படுகையில் 6 லட்சம் ஏக்கர் சம்பா நெல் சேதம்: இழப்பீடு வழங்க வேண்டும் - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


காவிரி படுகையில் 6 லட்சம் ஏக்கர் சம்பா நெல் சேதம்: இழப்பீடு வழங்க வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பருவம் தவறி பெய்த மழையால், 6 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. சம்பா சாகுபடி தொடங்கிய நாளில் இருந்தே ஏராளமான பாதிப்புகளை சந்தித்து வரும் உழவர்கள், இப்போது மீள முடியாத இழப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.

வடகிழக்கு பருவமழை விடைபெற்று விட்டதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்த பிறகும் கூட, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக காவிரி பாசன மாவட்டங்களில் கடுமையான மழை பெய்திருக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

நாகை மாவட்டம் கீவளூர், கீழையூர், தலைஞாயிறு, வேதாரண்யம், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், திருவையாறு, திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி ஆகிய பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 6 லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் முழுவதும் தலை சாய்ந்து தண்ணீரில் மூழ்கி விட்டன. மழை குறைந்துள்ள நிலையில், வெள்ள நீர் ஓரிரு நாளில் வடிந்தால் மட்டும் தான் பயிர்களை ஓரளவாவது காப்பாற்ற முடியும். ஆனால், அதுவும் சாத்தியமா? என்பது தெரியவில்லை.

காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பு சம்பா பருவத்தில் மட்டும் மழை - வெள்ளத்தில் நெற்பயிர்கள்  பாதிக்கப்படுவது நான்காவது முறையாகும். கடந்த நவம்பர் மாதத்தின் முதல் பகுதியில் பெய்த  வடகிழக்கு பருவமழையில் சேதமடைந்த 4,44,988 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களுக்கு வெறும் ரூ.168.35 கோடி இழப்பீடு மட்டும் 3,16,837 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதாவது ஒரு ஏக்கருக்கு சராசரியாக ரூ. 3783 மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. இது போதுமானதல்ல. நவம்பர் மாதம் பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, அரைகுறையாக இழப்பீடு வழங்கப்பட்டவற்றில் பெரும்பகுதி குறுவை பயிர்கள்.

அதன்பின் நவம்பர் மாதத்தின் பிற்பகுதியிலும், திசம்பர் இறுதி - ஜனவரி  தொடக்கத்திலும்  தொடர்ச்சியாக பெய்த மழைகளில் சம்பா பருவ நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அவற்றுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு சிந்தித்துக் கூட பார்க்கவில்லை. நவம்பர், திசம்பர் மாதங்களில் பெய்த மழைகளில் தப்பிப் பிழைத்து, அறுவடை நிலைக்கு வந்த சம்பா பயிர்கள் கூட, இப்போது பருவம் தவறி கொட்டிய மழையில் பாதிக்கப்பட்டுள்ளன. இப்போது சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், உழவர்கள் கடனாளிகளாக மாறுவதை தவிர்க்க முடியாது. அத்தகைய சூழலை தடுக்க வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர உழவர்கள் எவரும் கையில் முதலீடு வைத்துக் கொண்டு விவசாயம் செய்வதில்லை. மாறாக, வட்டிக்கு கடன் வாங்கித் தான் விவசாயம் செய்கிறார்கள்.  நல்ல விளைச்சல் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் முதலீடு நாசமாகி கடன்காரர்களாக மாறுகின்றனர். இதைத் தடுக்க இழப்பீடு வழங்கும்படி அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும் கோரிக்கை விடுத்தால், சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டால், அதற்கான இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் என்று கூறி தங்களின் பொறுப்புகளை தட்டிக்கழிக்கின்றனர்.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை கணக்கிடுவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனடியாக தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும். அந்தக் குழுவின் அறிக்கையை அடுத்த 10 நாட்களுக்குள் பெற்று பாதிக்கப்பட்ட உழவர் பெருமக்களுக்கு  ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இப்போது பெய்த மழையில் எள், உளுந்து உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்திருப்பதால், அவற்றுக்கும் போதிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Cavery Delta Paddy Farmers Issue Feb


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->