''எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது''; தவெக அரசை விமர்சித்துள்ள திமுக எம்பி கனிமொழி..!
DMK MP Kanimozhi has criticized the TVK government for refusing permission to hold protests on moral grounds
அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள இருந்த நிலையில் அதற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் சரத்குமார், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி ஒன்றின் போது போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவ்வாறு பொது இடத்தில் போதை பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி எதிர்கட்சியான திமுக-வின் மாணவர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திமுக-வின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழகம் முழுக்க அனுமதி மறுக்கப்பட்டதோடு, போராட்டம் செய்ய முயன்ற திமுக-வினரை காவல்துறை கைது செய்துள்ளனர். இதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு.
தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது. கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
DMK MP Kanimozhi has criticized the TVK government for refusing permission to hold protests on moral grounds