இலவச லேப்டாப் திட்டத்தில் திமுக அரசு ஏமாற்று வேலை செய்கிறது! இந்த ஆண்டு 10 லட்சம் மாணவர்களுக்கா? நயினார் நாகேந்திரன் காட்டம்
DMK government is cheating on the free laptop scheme Will it be for 10 lakh students this year Nainar Nagendran Kattam
தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தைச் சுற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த ஆண்டு 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்த திமுக அரசு, தற்போது வெறும் 10 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை “அப்பட்டமான ஏமாற்று வேலை” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னாள் அதிமுக ஆட்சியில் 12ஆம் வகுப்பு முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப் திட்டம், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் நோக்கில், 2025–26 நிதியாண்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ.2,000 கோடி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினும் சமீபத்தில், கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என கூறியிருந்தார்.
இதற்காக எல்காட் நிறுவனம் சர்வதேச டெண்டர் கோரிய நிலையில், டெல் மற்றும் ஏசர் நிறுவனங்கள் குறைந்த அளவில் டெண்டர் செய்தன. முதல் தொகுதி மடிக்கணினிகள் தமிழகத்துக்கு வந்துவிட்டதாகவும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்பே விநியோகிக்க அரசு முயற்சி செய்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்போதோ, இந்த ஆண்டு 10 லட்சம் மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளதாகவும், மீதமுள்ள 10 லட்சம் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு வழங்கப்படலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த மாற்றத்தைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் அரசு மீது கேள்விகளின் மழை பொழிந்துள்ளார்.
அவரது கேள்விகள்:“20 லட்சம் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் எனச் சொல்லி ரூ.2,000 கோடி ஒதுக்கிய திமுக அரசு, ஏன் இப்போது 10 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே வழங்குகிறது? எந்த அளவுகோலின் அடிப்படையில் இந்தத் தேர்வு? மேடையில் பகுத்தறிவு பேசும் அரசு, நடைமுறையில் இத்தனை பாகுபாடு ஏன்?”
“ஜெயலலிதாவின் கனவு திட்டமான இலவச லேப்டாப் திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் ஒழித்துவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் தூசி தட்டி எடுத்து செயல்படுத்துவது மாணவர்களை ஏமாற்றும் அரசியல் அல்லவா?”
அவர் மேலும், “அரசுக் கல்லூரிகளில் குடிநீர், கழிப்பறை, பேராசிரியர் போன்ற அடிப்படை வசதிகளே இல்லாமல் இருக்கும் நிலையில், லேப்டாப் திட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்ற திட்டமிடுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஓராண்டு ஆட்சியை வைத்துக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கான லேப்டாப் பட்ஜெட்டை ஒதுக்க திமுகவிற்கு யார் அதிகாரம் தந்தார்கள்? அடுத்த முறை ஆட்சிக்கு வரமாட்டோம் என்பதால் தங்களின் சுகத்திற்கேற்ப பட்ஜெட்டை நிர்ணயித்து கொள்ளையடிக்க நினைக்கிறார்களா?” என்ற கடுமையான குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.
இலவச லேப்டாப் திட்டத்தின் நடைமுறை மற்றும் பயனாளி எண்ணிக்கையைப் பற்றிய சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், அரசு இதற்கு என்ன பதில் அளிக்கிறது என்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
English Summary
DMK government is cheating on the free laptop scheme Will it be for 10 lakh students this year Nainar Nagendran Kattam