விஜய் போட்டியிடும் தொகுதியில் நேரடியாக களம் இறங்க திமுக முடிவு? – திமுக போட்ட பக்கா பிளான்? அரசியல் வியூகத்தை தொடங்கிய திமுக!
DMK decision to directly contest from Vijay constituency DMK plan DMK has started a political strategy
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசியல் நகர்வுகள், திமுகவின் கவனத்தை தீவிரமாக ஈர்த்துள்ளன. விக்கிரவாண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம், நாகப்பட்டினம் (நாகை) உள்ளிட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் விஜய் போட்டியிடலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், விஜய் எங்கு போட்டியிட்டாலும் அங்கு நேரடியாக திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், விஜய் போட்டியிடும் தொகுதி திமுக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த இடத்தில் திமுகவே நேரடியாக போட்டியிடும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் விஜய்யை அரசியல் ரீதியாக வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் களமிறங்கப் போகிறார் என்பது தற்போது தமிழக அரசியல் களத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. சமீபத்தில் தவெகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே சுமார் 10 ஆயிரம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பனையூரில் நடைபெற்ற நிகழ்வில், விருப்ப மனு பெற மக்கள் திரண்ட கூட்டம், அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு கூட அதிருப்தி ஏற்படும் அளவுக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விருப்ப மனுக்களில் பல, விஜய் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாகவும், அதாவது “விஜய் எங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும்” என்ற கோரிக்கையுடன் பலர் மனு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம், விஜயின் ‘வி சென்டிமென்ட்’ தொகுதி தேர்விலும் தொடரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். வேளச்சேரி, விக்கிரவாண்டி, விருகம்பாக்கம் மற்றும் நாகை ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் விஜய் களமிறங்கலாம் என்ற பேச்சு அதனால் வலுப்பெற்றுள்ளது.
இதற்கிடையே, சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகி விட்டதாகவே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கத் தயார் என விஜய் வெளிப்படையாக அழைப்பு விடுத்திருந்தாலும், இதுவரை எந்த அரசியல் கட்சியும் தவெகவுடன் கூட்டணிக்கு வரவில்லை. இதனால், 234 தொகுதிகளிலும் தவெக தனித்தே களமிறங்கும் சூழல் உருவாகியுள்ளது.
இருப்பினும், கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டால், சில கட்சிகள் தவெக பக்கம் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் அந்தக் கட்சிக்குள் உள்ளது. ஆனால், தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது, திமுக கூட்டணி உறுதியான நிலையில் இருப்பதால், அந்த வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மறுபுறம், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை திமுக தலைமையிடம் வலியுறுத்தி வருவதாகவும், இது திமுகவுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, தொகுதி பங்கீடு உள்ளிட்ட அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வராமல் நீடித்து வருகின்றன.
அதேபோல், திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை கோரி அழுத்தம் கொடுத்து வருவதால், கூட்டணிக்குள் உள்ள சமநிலையை பேணுவது திமுகவுக்கு சவாலாக மாறியுள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான், திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகி தவெக பக்கம் வருமா என்ற எதிர்பார்ப்புடன் விஜய் தரப்பு காத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், தற்போதைய அரசியல் நகர்வுகளை வைத்து பார்க்கும்போது, திமுக கூட்டணி உடையும் வாய்ப்பு இல்லை என்றும், பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் குறைவு என்பதே அரசியல் நோக்கர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இருப்பினும், விஜய் எந்த தொகுதியில் களமிறங்குகிறார் என்பதே, வரும் தேர்தலில் தமிழக அரசியலின் திசையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
English Summary
DMK decision to directly contest from Vijay constituency DMK plan DMK has started a political strategy