விஜயகாந்த்தை தேடிவந்து கூட்டணி அமைத்த பாஜக; பியூஷ் கோயலை சந்தர்ப்பவாத பேச்சை கண்டிப்பதாக தேமுதிக பொருளாளர் அறிக்கை..!
DMDK Treasurer Issues Statement Condemning Piyush Goyals Opportunistic Remarks
தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சரும், அக்கட்சியின் தமிழ்நாடு தேர்தல் மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நேற்று சென்னைக்கு வருகை தந்தார்.
அப்போது சென்னைக்கு விமானம் நிலையத்தில் பியூஷ் கோயல், செய்தியாளர்களைச் சந்தித்த போது, தவெக தலைவர் விஜய்க்கு குறித்து தமிழ்நாட்டின் மக்கள், கலாச்சாரம், அரசியல் பற்றிய முழுமையான புரிதல் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.
அத்துடன், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்காக பல ஆண்டுகள் உழைத்து, அரசியல் அனுபவம் பெற்று முதலமைச்சரானார்கள். விஜய் தனது கனவு உலகில் இருக்கிறார் என நினைக்கிறேன். அவர் தனது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். ஆனால், அது வாக்குகளாக மாறாது. விஜயகாந்த், கமல் போன்றுதான் விஜய்யும் என்று விமர்சித்து இருந்தார்.
இதற்கு தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,குறிப்பிட்டுள்ளதாவது;
பியூஷ் கோயலின் சந்தர்ப்பவாத பேச்சுக்குக் கண்டனம்.
''சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாடு அரசியல் குறித்து விஜய்க்கு தெரியவில்லை என்று சில கருத்துகளை முன்வைத்தார். அதோடு நிறுத்தாமல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை உருவாக்கி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த விஜயகாந்த் குறித்தும் தவறான கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விஜயகாந்த் தூய்மையான அரசியலில் ஈடுபட்டு தமிழ்நாட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனது வெற்றிக் கணக்கை தொடங்கி சட்டமன்றத்தில் கால் பதித்த அவர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தவர்.
விஜயகாந்த்தை தேடிவந்து கூட்டணி அமைத்த பாஜக:
முழுக்க முழுக்க அவரது உழைப்பும், மக்கள் அவர் மீது கொண்ட அன்பும் தான் அவரது வெற்றிக்கு வித்திட்டது என்பது உலகறிந்தது. அவருடைய தேர்தல் பாதையை, மக்களின் ஆதரவை பயன்படுத்த நினைத்த பாஜக அவரைத் தேடி வந்து கூட்டணி அமைத்தது.
2014 ஆம் ஆண்டு முதல் விஜயகாந்த்துடன் நட்பாக பழகியவர் பியூஸ் கோயல். விஜயகாந்த் மீது நிறைந்த அன்பு கொண்டிருந்த அவரிடம் இருந்து இதுபோன்ற வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை. மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் விஜயகாந்த் குறித்த பியூஷ் கோயலின் இந்த பேச்சுக்கு கண்டனங்களை பதிவு செய்கிறேன்.'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
DMDK Treasurer Issues Statement Condemning Piyush Goyals Opportunistic Remarks