திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு சலசலப்பு… ரவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கூட்டணி!சைலண்டாய் ஸ்டாலின் சம்பவம்!
Constituency sharing ruckus in DMK alliance Alliance by building a fire in the kitchen Silent Stalin incident
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை குழு அமைக்காமல், ரகசிய முறையில் ஆலோசனைகள் நடைபெறுகின்றன என்ற தகவல் கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை தூண்டியுள்ளது.
பொதுவாக தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கூட்டணி கட்சிகளுடன் பேச தனி குழு அமைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த முறை அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. தேர்தலில் அதிக தொகுதிகளில் திமுகவே நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கூட்டணி கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு குறைக்கப்படலாம் என்ற செய்தி பரவி வருகிறது.
அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினால் அதன் விவரங்கள் வெளியேறி கட்சி தொண்டர்களிடையே கருத்து வேறுபாடுகள் உருவாகும் அபாயம் இருப்பதால், முதற்கட்டமாக ரகசிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் வாயிலாக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் சந்திப்புகள் நடத்தப்படுகின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் உடனான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் சில சிறிய கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து ஆரம்ப கட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா இரண்டு தொகுதிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. வேல்முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இழுபறியாக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் பெற்றதை விட குறைவான இடங்கள் வழங்கப்படும் என்ற தகவல் அவர்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி விகிதம் குறைவாக இருந்ததே காரணம் என அமைச்சர்கள் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.
மதிமுகவுடனான பேச்சுவார்த்தையிலும் தெளிவான முடிவு எட்டப்படவில்லை. திமுக சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதல் இடங்கள் வழங்கப்படும், இல்லையெனில் குறைவான தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மதிமுக தரப்பு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்த்துள்ள நிலையில், அதற்கு குறைவான இடங்கள் மட்டுமே வழங்கப்படலாம் என்ற செய்தி அக்கட்சியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், கூட்டணி கட்சிகளின் அதிருப்தியை குறைக்க தனித்தனியாக நேரடி ஆலோசனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவு பெற்ற பின்பே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மொத்தத்தில், 2026 தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணிக்குள் நடைபெறும் இந்த ரகசிய ஆலோசனைகள் மற்றும் தொகுதி பங்கீடு கணக்குகள், தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Constituency sharing ruckus in DMK alliance Alliance by building a fire in the kitchen Silent Stalin incident