ஊடுருவல்காரர்களுக்கு இடம் கொடுத்தது காங்கிரஸ்...! - அசாமில் மோடி கடும் தாக்கு
Congress party gave refuge infiltrators Modi launches fierce attack Assam
பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாமின் நாகலாண்ட் மாவட்டத்தில் உள்ள காளியாபோரில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, ரூ.6,950 கோடி மதிப்பிலான காசிரங்கா மேம்பாலத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.86 கிலோமீட்டர் நீளமுடைய இந்த காசிரங்கா மேம்பாலம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டமாகும்.

குறிப்பாக, வெள்ள காலங்களில் காசிரங்கா வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் பாதுகாப்பாக இடம்பெயர உதவும் வகையில் இந்த உயர்மட்டப் பாலம் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, காணொளி காட்சி மூலம் கவுகாத்தி (காமாக்யா) – ரோஹ்தக் மற்றும் திப்ருகர் – லக்னோ (கோமதி நகர்) ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ள இரண்டு புதிய அம்ரித் பாரத் விரைவு ரெயில்களை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அசாமில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள், “வளர்ச்சியே பிரதானம்” என்ற பா.ஜ.க-வின் கொள்கையை மேலும் உறுதிப்படுத்துகின்றன என்று பிரதமர் தெரிவித்தார். மேலும், நிலங்களை ஆக்கிரமித்த ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவதன் மூலம், அசாமின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் பா.ஜ.க அரசு உறுதியுடன் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.
முந்தைய காங்கிரஸ் அரசுகள், தேர்தல் லாபத்திற்காக அசாமின் நிலங்களை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்ததாக குற்றம்சாட்டிய மோடி, இதன் காரணமாக மாநிலத்தில் பல தசாப்தங்களாக ஊடுருவல் அதிகரித்ததாக தெரிவித்தார். ஊடுருவல்காரர்கள் அசாமுக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், மக்கள் காங்கிரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நாட்டில் மக்கள் நம்பிக்கையை பெற்ற முதன்மை அரசியல் கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளதாக கூறிய மோடி, பீகார் தேர்தல், மராட்டியம் மற்றும் கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க பெற்ற வெற்றிகளை இதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார்.
எதிர்மறை அரசியல் மட்டுமே பேசும் காங்கிரஸ், மக்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டதாக விமர்சித்த அவர், மும்பையில் தோன்றிய அந்த கட்சி, இன்று அங்கு நடைபெறும் தேர்தல்களில் 4-வது அல்லது 5-வது இடத்திற்கே தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
வளர்ச்சிக்கான தெளிவான திட்டங்கள் இல்லாததே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம் எனக் கூறி, நாட்டின் எதிர்காலம் வளர்ச்சியை நோக்கிய அரசியலில்தான் இருப்பதாக பிரதமர் மோடி தனது உரையை நிறைவு செய்தார்.
English Summary
Congress party gave refuge infiltrators Modi launches fierce attack Assam