கோவையில் பயங்கரம்: 40 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 ஊழியர்கள் பலி - 8 மணி நேர போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு!
Coimbatore Tragedy Two Workers Die in 40 Foot Sewage Tank Bodies Recovered After 8 Hour Operation
கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி கழிவுநீர் உந்து நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில், இரண்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 40 அடி ஆழமும் 15 அடி விட்டமும் கொண்ட பிரம்மாண்ட கழிவுநீர் தொட்டியில் பழுதான மோட்டாரைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் துயரம் நேர்ந்துள்ளது.
ரத்தினபுரியைச் சேர்ந்த அர்ஜுன்குமார் (38) மற்றும் பாப்பம்பட்டியைச் சேர்ந்த மின் பணியாளர் சுரேஷ் (27) ஆகிய இருவரும் பணியை முடித்துவிட்டு மேலே ஏற முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அர்ஜுன்குமார் நிலைதடுமாறி தொட்டிக்குள் விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற சுரேஷும் உள்ளே இறங்கியபோது, தொட்டிக்குள் இருந்த நச்சு வாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இருவரும் 40 அடி ஆழ கழிவுநீரில் மூழ்கினர்.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கழிவுநீரை வெளியேற்றும் வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, சுமார் 8 மணி நேரக் கடும் போராட்டத்திற்குப் பிறகு இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த மீட்புப் பணிகளைப் பார்வையிட்ட தவெக வேட்பாளர் செந்தில்குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார்.
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இத்தகைய அபாயகரமான பணிகளில் ஈடுபடுத்தப்படுவதே உயிரிழப்புகளுக்குக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நச்சு வாயு பாதிப்பு மற்றும் எதிர்பாராத விபத்தால் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Coimbatore Tragedy Two Workers Die in 40 Foot Sewage Tank Bodies Recovered After 8 Hour Operation