தீனா., மூனா., கானா., முதல்வர் ஸ்டாலின் சொன்ன கதை! - Seithipunal
Seithipunal



தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் சென்னையில் இலக்கியத் திருவிழாவை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "49 ஆண்டுகளுக்கு முன்பு 1974-ஆம் ஆண்டு சனவரி 16 ஆம் நாள் அன்று தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் 176 கல்லூரி பாட நூல்களை வெளியிட்டு அன்றைய முதல்வர் கருணாநிதி பேசினார்கள்.

“தமிழைப் படிப்பது என்பது வேறு, தமிழில் படிப்பது என்பது வேறு. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். தமிழைப் படிப்பது என்பது சங்ககால இலக்கியங்களை, காவியங்களை, கவிதைகளை நம் பழங்கால பனுவல்களை படிப்பது, தமிழைப் படிப்பது தேவை.

தமிழில் படிப்பது என்பது வரலாறு படிப்பது, நிலநூல் படிப்பது, பொருளியல் படிப்பது, பல்துறைகளைப் படிப்பது, தமிழைப் படிப்பது தேவை. அதைவிட தமிழில் படிப்பது மிக மிகத் தேவை. தமிழ்நாட்டில் எல்லாவகையான எதிர்கால வளர்ச்சிக்கும் அது தேவை என்று தமிழ்மொழியில் அறிவுச் செல்வம் பெருகவேண்டியதைப் பற்றி உரையாற்றியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடந்த மிகப் பெரிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி எது என்று கேட்டால் இந்த நிகழ்ச்சியாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

தலைவர் கருணாநிதி மேலும் ஒன்றை அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்கள்.

''மொழி மானத்தைப் பெற்றாக வேண்டும்'' என்று குறிப்பிட்டார்கள்.
இன்றைய தேவை என்பது இதுதான்.
மொழி என்பது ஒரு இனத்தின் உயிர்.
இலக்கியம் என்பது ஒரு இனத்தின் இதயம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

மொழியைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த இனம்தான் நம்முடைய தமிழ் இனம். திராவிட இயக்கம் அரசியல் இயக்கமாக இருந்தாலும் மொழி காப்பு இயக்கமாகவே தொடக்கம் முதல் இயங்கி வருகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த அரசியல் கட்சியும், இலக்கிய இயக்கமாக இருந்ததில்லை. திமுக தான் அப்படி வளர்ந்தது. தன்னை வார்ப்பித்துக் கொண்டது.

தீனா மூனா கானா திருக்குறள் முன்னேற்றக் கழகம் என்று திரைப்பாடலில் பாடினார் கலைவாணர் என்.எஸ்.கே. அரசியல் தலைவர் தான் நம்முடைய தலைவர் கருணாநிதி. ஆனால் குறளோவியமும், சங்கத்தமிழும் அவர் பெயரை தமிழ் உள்ளவரை சொல்லிக் கொண்டே இருக்கும்.

எத்தனையோ திட்டங்களைத் தீட்டினாலும், சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரியில் 133 அடியில் அமைந்திருக்கக்கூடிய திருவள்ளுவர் சிலையும், காலத்தால் அழியாத கம்பீரமான சின்னங்களாக இன்றைக்கு இருக்கின்றன.இதை நான் சொல்வதற்குக் காரணம் - மொழியைப் பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது. அறிவால், உணர்வால் வளர்த்தாக வேண்டும். அதற்காகத்தான் இத்தகைய இலக்கிய விழாக்களை நாம் நடத்துகிறோம்.

இந்த ஆண்டு முதல் உலகப்புத்தகச் சந்தையை இங்கேயே கண்காட்சியாக நாம் நடத்தப் போகிறோம். உன்னதமான தமிழ்ப்படைப்புகள் அனைத்தும் உலகத்தின் பல மொழிகளுக்கு போக இருக்கின்றன.

இந்த நேரத்தில் இத்தகைய படைப்புகள் தமிழர்களால் அதிகம் படிக்கப்பட வேண்டும். அதற்கு இளமைக்காலத்தில் இருந்தே மாணவ சமுதாயத்துக்கு தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராத ஆர்வத்தை உருவாக்க வேண்டும். படைப்பரங்கம், பண்பாட்டரங்கம், பயிலரங்கம், குழந்தைகள் இலக்கிய அரங்கம், நிகழ்த்துக் கலைகள் என மிக விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இது போன்ற திருவிழாக்கள் இலக்கிய ஆர்வத்தை உருவாக்க உறுதுணையாக அமையும்.

மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்குப் போவதற்கு முன்னால் மருத்துவரிடம் அனுமதி பெற்று புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார் பேரறிஞர் அண்ணா.

தூக்கு மேடைக்குச் செல்லும் போதும் படித்துக் கொண்டு இருந்தார் மாவீரன் பகத்சிங். வரலாற்றை படித்தவர்களால் தான் வரலாற்றைப் படைக்க முடியும். இலக்கியம் படித்தால் தான் நாம் வாழும் சமுதாயத்தை உணர முடியும். இலக்கியம் என்பது பொழுது போக்கு அல்ல, அதுதான் நமது நோக்கும் போக்குமாக மாற வேண்டும். இலக்கியம் என்பது பேரியக்கமாக மாற வேண்டும்.

புத்தகக் கண்காட்சிகள் மாவட்டந்தோறும் பரவி நடப்பதைப் போல இலக்கிய திருவிழாக்களும் மாவட்டந்தோறும் பரவி நடைபெற வேண்டும். இது கூடி கலையும் கூட்டம் அல்ல,கூடிப் படைக்கும் கூட்டம் என்பதை நிரூபிக்கும் வகையில் இலக்கிய விழா சிறப்பிக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்." என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cm Stalin say about kalaivanar and karunanithi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->