கரூருக்கு முதல்வர் விஜய் கொடுக்கும் பிரம்மாண்ட பரிசு...! விரைவில் உருவாகிறது புதிய ‘நினைவுச் சின்னம்’...!
Chief Minister Vijay grand gift Karur new memorial built soon
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது.

இந்தச் சூழலில், உயிரிழந்த குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று கரூர் வந்தார்.இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தற்காலிக அடிப்படையில் பணி வழங்கலாம் என்று உத்தரவிட்டார்.இதையடுத்து, கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 32 குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு, அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப அரசு பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் இருந்து கரூருக்கு கார் மூலம் வந்த முதலமைச்சர் விஜய்க்கு வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய் பேசியதாவது,"என் நெஞ்சில் என்றும் வாழும் கரூர் மக்களே... உங்களின் அன்பான வரவேற்புக்கு என் மனமார்ந்த வணக்கங்கள்.
ஒரு மனிதன் எவ்வளவு உயரத்தை அடைந்தாலும், வாழ்க்கையில் ஏற்பட்ட சில காயங்களையும் வேதனைகளையும் மனதில் இருந்து ஒருபோதும் அழிக்க முடியாது. என் வாழ்க்கையில் பல சோதனைகளையும் வலிகளையும் கடந்திருக்கிறேன். ஆனால், கரூர் சம்பவம் என் மனதில் ஆறாத காயமாகவே உள்ளது.
அந்த நாளில் என் சகோதரிகளையும், அப்பாவி குழந்தைகளையும் நான் இழந்தேன். அந்த துயரத்தை எந்த காலமும் மறக்க முடியாது. அந்த குடும்பங்களின் வேதனை என் மனதிலும் என்றும் நிலைத்திருக்கும்.பெரம்பலூருக்கு செல்லும் முன்பு கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி அங்கு செல்ல வேண்டாம் என்று காவலர்கள் தெரிவித்தனர்.
ஆனால், நாமக்கல்லில் இருந்து கரூருக்கு வந்தபோது அங்கிருந்த காவலர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையும் வழங்காதது ஏன்? நெடுஞ்சாலையில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கே எங்களை அழைத்துச் சென்றதும் காவலர்கள்தான். ஒவ்வொரு கட்டத்திலும் என்ன செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது யார்? காவலர்கள் நினைத்திருந்தால் அந்த நிகழ்ச்சியையே நிறுத்தியிருக்க முடியும்.
ஆனால், அவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கே எங்களை வழிநடத்தினர். அந்த சூழ்நிலையை நான் முழுமையாக நம்பினேன். அதனால்தான் அன்றைய மேடையில் காவலர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.அந்த துயர சம்பவத்திற்குப் பிறகு நான் ஒளிந்து விட்டதாக கூறுவது மிகவும் வேதனை அளிக்கிறது.
என்னிடம் பணமா? மக்களா? என்று கேட்டால், என் பதில் என்றும் மக்கள்தான். மக்களின் உயிரைவிட எனக்கு வேறு எதுவும் முக்கியமல்ல.நமக்கு துயரத்தை ஏற்படுத்தியவர்களுக்கு மக்கள் கடந்த தேர்தலில் ஜனநாயக ரீதியாக பதிலடி கொடுத்துள்ளனர். ஆனால் அது மட்டும் போதாது. இனி யாரும் மக்களின் நம்பிக்கையை துரோகம் செய்ய முடியாத அளவிற்கு விழிப்புணர்வும், மக்கள் தீர்ப்பும் தொடர்ந்து இருக்க வேண்டும்.த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு லஞ்சமும் இல்லை, ஊழலும் இல்லை.
அரசு அலுவலகங்களில் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன. பொதுமக்களுக்கு மரியாதையுடன் சேவை வழங்கப்படுகிறது. இதை மக்களே நேரடியாக கூறும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.முந்தைய ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசாரிக்க புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. மக்கள் உருவாக்கிய அரசின் மீது சிலர் திட்டமிட்டு குற்றச்சாட்டுகளை மட்டுமே சுமத்துகிறார்கள்.
ஆனால் உண்மை என்றும் மக்களின் பக்கம்தான் இருக்கும்.கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றவும், அந்த வேதனையை வருங்கால தலைமுறையினர் மறக்காமல் இருக்கவும் த.வெ.க. சார்பில் கரூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.மேலும், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி 'தாய்மாமன் தங்க மோதிரம்' என்ற புதிய நலத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அது வெறும் அறிவிப்பு அல்ல; செயல்பாட்டில் நிரூபிக்கப்படும் திட்டமாக இருக்கும்".இவ்வாறு முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.
English Summary
Chief Minister Vijay grand gift Karur new memorial built soon