பொங்கலுக்கு முன்பே அரசியலில் மாற்றம்! தவெக கூட்டணியில் இணையும் ஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன்? போட்டு உடைத்த செங்கோட்டையன்
Change in politics before Pongal Will O Panneerselvam and TTV Dhinakaran join the Thaweka alliance Sengottaiyan has broken it
தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் பொங்கலுக்கு முன்னதாகவே இணைவார்கள் என்று தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தகவலை உறுதியாகக் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், அதிமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் பொங்கலுக்கு முன்பே தவெகவில் இணையத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதேபோல், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் தவெக கூட்டணியில் சேருவது உறுதி என அவர் கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்குப் பிறகு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றனர். ஆனால் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அந்தக் கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தொடர்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இவர்கள் இருவரையும் கூட்டணியில் இணைப்பதை விரும்பவில்லை என்பதாலும், பாஜகவும் அவர்களை பெரிதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதாலும், அவர்கள் புதிய அரசியல் பாதையை தேடும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தப் பின்னணியில்தான், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. தவெக மதம், மொழி ஆகிய எல்லைகளைத் தாண்டிய இயக்கம் என்றும், ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்தி சமத்துவத்தை உருவாக்குவதே அதன் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் ஆட்சியில் அமர்வார் என்றும், அதனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் செங்கோட்டையன் உறுதியாக கூறினார். பொங்கலுக்கு முன்பாகவே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் தவெகவில் இணைய உள்ளதாக அவர் தெரிவித்தது, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதை வெளிப்படுத்துகிறது.
English Summary
Change in politics before Pongal Will O Panneerselvam and TTV Dhinakaran join the Thaweka alliance Sengottaiyan has broken it