2 தொகுதிகளில் இடைத்தேர்தல்: காங்கிரஸ் களம் இறங்க தயார்...! - சித்தராமையா அறிவிப்பு
Bypolls 2 Constituencies Congress Ready Enter Fray Siddaramaiah Announces
கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. மாநிலத்தின் பாகல்கோட் மற்றும் தாவணகரே தெற்கு ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.
அந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உயிரிழந்ததையடுத்து அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதே காலகட்டத்தில் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இடைத்தேர்தலை சந்திக்க காங்கிரஸ் முழுமையாக தயார் நிலையில் இருப்பதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அவர் ,“இடைத்தேர்தலுக்கான அனைத்து தயாரிப்புகளும் நிறைவடைந்துள்ளன.
தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் முழுமையாக தயார்” என்று தெரிவித்தார்.கடந்த தேர்தலில் பாகல்கோட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மறைந்த எம்.எல்.ஏ. மேதி, பா.ஜ.க. வேட்பாளர் வீரண்ணா சரந்திமாத்தை 5,878 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அதேபோல் தாவணகரே தெற்கு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவசங்கரப்பா, பா.ஜ.க. வேட்பாளர் பி.ஜி. அஜய் குமாரை 27,888 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்.
இந்த இடைத்தேர்தல் கர்நாடக அரசியலில் புதிய அரசியல் சவாலையும், கட்சிகளுக்கு முக்கியமான அரசியல் பரீட்சையாகவும் மாறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Bypolls 2 Constituencies Congress Ready Enter Fray Siddaramaiah Announces