மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதலா...? டெல்லி காவலர்களின் அத்துமீறலுக்கு எதிராக கொந்தளித்த வைகோ...! - சீறும் மதிமுக
brutal attack student Vaiko protested against Delhi Police atrocities MDMK roars
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மீது காவலர்கள் நடத்தியதாகக் கூறப்படும் கடுமையான தாக்குதலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பான மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, கடந்த ஜூலை 20-ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் லட்சக்கணக்கான மாணவர்களும், கரப்பான் பூச்சி இயக்கத்தினரும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், ஜனநாயக வழியில் போராடிய மாணவர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலில் ஏராளமான மாணவ-மாணவிகள் காயமடைந்தனர். போராட்டத்தை ஒடுக்குவதற்காக டெல்லி முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், தலைநகர் நகரமே ராணுவ முகாம் போல் காட்சியளித்தது.
காவலர்களின் தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பல்வேறு இடங்களில் பாதுகாப்பும், உதவியும் வழங்கினர். காயமடைந்த மாணவர்கள் டெல்லி மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள சுர்ஜித் பவனில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி, அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் மற்றும் நானும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஊக்கமளித்தோம். பின்னர் சுர்ஜித் பவனுக்குச் சென்று, காவலர்களின் தாக்குதலில் காயமடைந்த மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினோம். அவர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவும், துணையும் வழங்குவோம் என்று உறுதியளித்தோம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ.யைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு பேபி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, மாணவர்களுக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்து வைத்தார்.அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய நான், இந்தப் போராட்டம் நியாயமான கோரிக்கைகளுக்காக எழுந்துள்ள உரிமைப் போராட்டம் என்று தெரிவித்தேன். மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.அடக்குமுறையையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தி இந்தப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று மத்திய அரசு நினைக்கக் கூடாது.
மாணவர்களின் நியாயமான குரலை ஒடுக்க மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் கடும் எதிர்ப்பைச் சந்திக்கும் என்று எச்சரிக்கிறேன்.கரப்பான் பூச்சி இயக்கத்தினரும், ஏராளமான இளைஞர்களும் எதற்கும் அஞ்சாமல் உறுதியுடன் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஆதரவை வழங்குகிறது.
மாணவர்களின் உரிமைக்காகவும், நியாயத்திற்காகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் நடைபெறும் போராட்டத்தை காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையினரைப் பயன்படுத்தி மேலும் ஒடுக்க மத்திய அரசு முயற்சி செய்தால், அந்த அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் மிகப்பெரிய எழுச்சியாக மாறும் என்று எச்சரிக்கிறேன்.
மத்திய அரசு, டெல்லி அரசு மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
English Summary
brutal attack student Vaiko protested against Delhi Police atrocities MDMK roars