1996 வீடியோ இருக்கு... அவருக்கு என்னங்க கொள்கை? எனக்கு கூட தான் கூட்டம் கூடியது - விஜயை விளாசிய சரத்குமார்!
BJP Sarathkumar Attack TVK Vijay
சென்னையில் பாஜக நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார், தவெக விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், விஜய் அரசியலில் கொள்கை அல்லது கோட்பாடு முன்வைக்காமல் எதிர்ப்பை மட்டுமே ஆயுதமாகக் கொண்டுள்ளதாக விமர்சித்தார். மக்கள் நலனுக்காக சேவை செய்வேன் என்கிறார், ஆனால் எதை எப்படி செய்வார், எந்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தப் போகிறார் என்பது குறித்து இதுவரை தெளிவுபடுத்தவில்லை என சுட்டிக்காட்டினார்.
மேலும், “நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறும் உரிமை அவருக்கு உண்டு. அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் வார இறுதி நாட்களில் மட்டும் பிரசாரம் செய்வது எந்த உத்தியை அடிப்படையாகக் கொண்டது என்பது புரியவில்லை” என்றார்.
மேலும், பெரிய கூட்டம் கூடுவது ஒருவரின் வெற்றியின் அடையாளமாகக் கொள்ள முடியாது என்றும் விளக்கினார். “1996ல் எனக்கும் மாபெரும் கூட்டங்கள் குவிந்தன. அப்போது சமூக வலைத்தளங்கள் கூட இல்லை. தேவையானால் அந்தக் காணொளிக் காட்சிகளை காட்ட முடியும். மதுரையில் என்னைக் காண மக்கள் பெருமளவில் திரண்டனர். அதே சமயம், நான் நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற ஹிட் திரைப்படங்களை வழங்கி உச்ச நடிகராக இருந்தபோதுதான் அரசியலுக்கு வந்தேன். ஓய்வுக்குப் பிறகு அல்ல” என நினைவூட்டினார்.
கூட்டங்கள் பிரபலத்தைக் காட்டக்கூடும், ஆனால் அது மட்டுமே ஆட்சிக்கான பாதையை உறுதி செய்யாது என்றும் அவர் வலியுறுத்தினார். “கொள்கைகள், நம்பிக்கைகள் மூலம் மக்களை ஈர்த்து சிறப்பாக செயல்படும் திறன் வந்தால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும்” என்று சரத்குமார் கருத்து தெரிவித்தார்.
English Summary
BJP Sarathkumar Attack TVK Vijay