பாதிக்குப் பாதி சீட்டு கேட்ட பாஜக! ஷாக் ஆகிப் போன எடப்பாடி! இதென்ன பீகாரா? சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு விவகாரம்!
BJP asks for half and half tickets Edappadi is shocked Is this Bihar The heated seat sharing issue
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவும் பாஜகவும் மறைமுகமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த தேர்தலில் குறைந்த தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, இம்முறை நேரடியாக 60 தொகுதிகளை கோரி வருவதாகவும், கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்தமாக 100 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கோரிக்கைகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
234 சட்டமன்றத் தொகுதிகளில் 134 இடங்களில் மட்டுமே அதிமுக போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டால், தேர்தல் சாதகமாக முடிந்தாலும் தனிப்பெரும்பான்மை பெற முடியாத சூழல் உருவாகும் என்ற அச்சம் அதிமுக தரப்பில் நிலவுகிறது. இதனாலேயே கூட்டணி அமைப்பதில் எடப்பாடி பழனிசாமி மிகுந்த கவனத்துடன் கணக்குப் போட்டு முடிவெடுக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல்கள் மற்றும் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது போன்ற நிகழ்வுகள் தலைமைக்கு கூடுதல் சவாலாக பார்க்கப்படுகின்றன. ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைவார் என்ற தகவல்களும் பரவி வரும் நிலையில், அது நடந்தால் கட்சியின் ஒருங்கிணைப்புக்கும் தேர்தல் தயாரிப்புக்கும் பலம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாதபோதும் சுமார் 23 சதவீத வாக்குகளை பெற்றதும், பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்ததும் அதன் அடிப்படை வாக்கு வங்கி இன்னும் நிலையாக இருப்பதை காட்டுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு கூட்டணி அமைந்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என இரு தரப்பும் கருதினாலும், பாஜக முன்வைக்கும் கடுமையான தொகுதி கோரிக்கைகள் பேச்சுவார்த்தையை சிக்கலாக்கி வருகின்றன. பொங்கல் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு முன்னர் கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
English Summary
BJP asks for half and half tickets Edappadi is shocked Is this Bihar The heated seat sharing issue