அரியணையில் ஏறத் தடை...? விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு...? - தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு!
Banned from ascending throne Governor refuses administer oath Vijay Tamil Nadu politics peak
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி அரசியல் அரங்கில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இதனுடன் காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் இணைந்ததால், தவெக கூட்டணியின் மொத்த பலம் 112 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர் ஆதரவு இன்னும் எட்டப்படாததால், அரசியல் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் நேற்று மாலை தமிழக ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து, தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென கோரி மனுவை வழங்கியிருந்தார்.

ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவு எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படாத காரணத்தால், அவரை ஆட்சியமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்கவில்லை என தகவல்கள் வெளியாகின.இந்த சூழலில், இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்த விஜய், “தனிப்பெரும் கட்சி” என்ற அடிப்படையில் தங்களுக்கு முதன்மை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்னர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் அவர் ஆளுநரிடம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆளுநர், விஜய் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.இந்த சந்திப்பின்போது, “113 உறுப்பினர்களை மட்டுமே வைத்துக்கொண்டு நிலையான ஆட்சி அமைக்க இயலுமா?”, “234 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் தேவையான பெரும்பான்மை இன்றி அரசு நீடிக்க முடியுமா?”, “மற்ற கட்சிகளின் ஆதரவு உறுதியாக உள்ளதா?” போன்ற பல முக்கிய கேள்விகளை ஆளுநர் எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்காதது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில், “தமிழகத்தில் ஆட்சியமைக்க தேவையான தெளிவான பெரும்பான்மை தற்போது தவெகவிடம் இல்லை. சட்டமன்றத்தில் யார் நிலையான பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடியவர் என ஆளுநர் கருதுகிறாரோ, அவரையே ஆட்சியமைக்க அழைக்க அரசியலமைப்புச் சட்டம் வழிவகுக்கிறது.
தனிப்பெரும் கட்சியாக இருப்பது மட்டுமே போதுமானதல்ல; தேவையான ஆதரவை உறுதிப்படுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 361வது பிரிவின்படி ஆளுநரின் தீர்மானத்தை எளிதில் சவாலுக்கு உட்படுத்த முடியாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
விஜய் பெரும்பான்மை ஆதரவை நிரூபித்த உடனேயே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதில் ஆளுநர் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆட்சியமைப்பில் உருவாகியுள்ள சட்ட மற்றும் அரசியல் சிக்கல்களை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, தவெக எம்.எல்.ஏ.க்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் பதவியேற்பு வாய்ப்புகள் குறித்து பனையூரில் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், ஆளுநருடனான விஜயின் சந்திப்புக்குப் பிறகு அரசியல் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Banned from ascending throne Governor refuses administer oath Vijay Tamil Nadu politics peak