தவெக வேட்பாளர் மீது தாக்குதலா...? 'வன்முறையே திமுகவின் ஆயுதம்'....! - விளாசித் தள்ளிய ஆதவ் அர்ஜுனா...!
Attack tvk candidate Violence weapon DMK Adhav Arjuna slams
தேர்தல் நிறைவடைந்த மூன்றாம் நாளில், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறைகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையை நேரடியாக ஆய்வு செய்ய வந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “திமுக தேர்தலில் பின்னடைவை எதிர்நோக்கும் ஒவ்வொரு தருணத்திலும் வன்முறையை தஞ்சமாகக் கொள்வது புதுமையல்ல, பழக்கமாகவே மாறிவிட்டது” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், துறைமுகம் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்ற நாளன்று மாலை நேரத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, சுமார் 30 பேருடன் வந்து அச்சுறுத்தும் சூழலை உருவாக்கி வன்முறையில் ஈடுபட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
அந்த தாக்குதலில் தவெக வேட்பாளர் அசோக் குமார் காயமடைந்ததுடன், அவருடன் இருந்த வெற்றி என்பவரும் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு, சைதாப்பேட்டை பகுதியில் தவெகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“பணம் வழங்கி வாக்குகளை ஈர்ப்பதே திமுகவின் நம்பிக்கை ஆயுதமாக மாறியுள்ளது; ஒரு வாக்குக்கு ரூ.5,000 வழங்கும் நிலைக்கு அவர்கள் தாழ்ந்துவிட்டனர்” எனவும் அவர் சாடினார்.
மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற இலக்குடன் தவெக தலைவர் கட்சியை உருவாக்கியதாகவும், அந்த பாதையில் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டு வாக்குகளை சேகரித்து, தமிழக அரசியலில் புதிய எழுச்சியை உருவாக்கியுள்ளனர் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
English Summary
Attack tvk candidate Violence weapon DMK Adhav Arjuna slams