₹5,800 கோடி சொத்து! தேர்தல் வரலாற்றையே மிஞ்சிய ‘பில்லியனர்’ வேட்பாளர்! – மலைக்க வைக்கும் லீமா ரோஸ் சொத்து மதிப்பு!
Assets worth 5800 crore The billionaire candidate who has surpassed election history Lima Rose staggering asset value
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து விவரங்கள் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடமும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஒரே குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ₹5,800 கோடியைத் தாண்டியிருப்பது இந்தத் தேர்தலின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
அதிமுக சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடும் லீமா ரோஸ் மார்ட்டின், இந்தத் தேர்தலில் தமிழகத்தின் மிகப்பெரிய பணக்கார வேட்பாளராக உருவெடுத்துள்ளார். அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் ₹1,049.56 கோடி எனப் பதிவாகியுள்ளது. இதில் ₹139.62 கோடி அசையும் சொத்துகளாகவும், ₹909.94 கோடி அசையாச் சொத்துகளாகவும் உள்ளன.
லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவியான லீமா ரோஸ், கல்வி தகுதியாக 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், தனக்குச் சொந்தமாக மூன்று TVS XL மொபெட்கள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், குடும்ப அளவில் பார்க்கும்போது அவர்களின் சொத்து மதிப்பு ₹5,800 கோடியைத் தாண்டியுள்ளது.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ₹603 கோடி சொத்துக்களுடன் உள்ளார். மூன்றாம் இடத்தில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் ₹209 கோடி சொத்துகளுடன் உள்ளார். நான்காவது இடத்தில் ஆதவ் அர்ஜுனா ₹198 கோடி, ஐந்தாவது இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் ₹88 கோடி சொத்துகளுடன் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், லீமா ரோஸின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவரது சொத்து மதிப்பு மட்டும் ₹664 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தரவுகள், 2026 தேர்தலில் கோடீஸ்வர வேட்பாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை காட்டுகின்றன. சாதாரண மக்களுக்கும், இவ்வளவு பெரிய சொத்து மதிப்புள்ள வேட்பாளர்களுக்கும் இடையிலான இடைவெளி குறித்து சமூக வலைதளங்களில் தீவிர விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தப் பின்னணியில், பண பலம் தேர்தல் முடிவுகளை எந்த அளவுக்கு பாதிக்கும்? ஜனநாயகத்தில் இதன் தாக்கம் என்ன? என்ற கேள்விகளுக்கு பதில், மே 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும்.
English Summary
Assets worth 5800 crore The billionaire candidate who has surpassed election history Lima Rose staggering asset value