அமோனியா விபத்து 9 பேர் பலி! அதே நாளில்தான் இதுவும் நடந்து இருக்கு..திரிஷாயுடன் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்: திமுக ஐடி விங் விமர்சனம்!
Ammonia leak kills 9 This also happened on the very same day CM celebrates Vijay birthday with Trisha DMK IT Wing criticizes
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்ததும், 60-க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதும் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவம் நடைபெற்ற அதே நாளில், தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவருமான விஜய் தனது 52-வது பிறந்தநாளைக் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் கேக் வெட்டிய புகைப்படத்தை பகிர்ந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் பேசுபொருளாகியுள்ளது.
விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து திரிஷா வெளியிட்ட பதிவில், “எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாய் ஆக்கிய நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், நள்ளிரவு 12 மணிக்கே வாழ்த்து தெரிவித்ததை சுட்டிக்காட்டும் வகையில் “00:00” என்றும் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையில், திருவள்ளூர் விபத்து காரணமாக தலைமைச் செயலகத்தில் திட்டமிடப்பட்டிருந்த பிறந்தநாள் கேக் வெட்டும் நிகழ்வை முதல்வர் விஜய் ரத்து செய்ததாக தகவல்கள் வெளியானது. உயிரிழப்புகள் நிகழ்ந்த சூழலில் கொண்டாட்டங்கள் பொருத்தமல்ல என்ற காரணத்தால் அவர் அந்த நிகழ்வைத் தவிர்த்ததாக கூறப்பட்டது.
ஆனால், அதே நாளில் திரிஷாவுடன் கேக் வெட்டியதாக வெளியாகிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை கிளப்பின. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக சிலர் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் இந்த விவகாரத்தை விமர்சித்துள்ளது. நடிகை திரிஷா நடித்த திருப்பாச்சி திரைப்படத்தின் ஒரு காட்சியை பகிர்ந்த அந்த பதிவில், அமோனியா வாயுக் கசிவால் 9 பேர் உயிரிழந்ததும், பலர் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “அந்த நாளில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்கவில்லை. எனவே அவருக்காக தெரிவிக்கப்படும் அனைத்து பிறந்தநாள் வாழ்த்துகளும் அர்த்தமற்றதாக தோன்றுகின்றன” என திமுக ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதே நேரத்தில், விபத்து தொடர்பான மீட்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
English Summary
Ammonia leak kills 9 This also happened on the very same day CM celebrates Vijay birthday with Trisha DMK IT Wing criticizes