கள்ளர் விடுதி பெயர் மாற்றம் கூடாது - திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், கள்ளர் விடுதிகளின் பெயரைச் சமூகநீதி விடுதி எனப் பெயர் மாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் முன்னாள் மாணவர் சங்கத்தினர், கள்ளர் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கள்ளர் சமுதாய மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும், எதிர்கால நலனுக்காகவும் உருவாக்கப்பட்ட கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதும், விடுதிகளை சமூக நீதி விடுதிகள் எனப் பெயர் மாற்றம் செய்வதும் அதன் தனித்துவத்தை இழக்கும் என்பதோடு அவர்களின் வாழ்வியல் நடைமுறையை மாற்றும் நடவடிக்கையாக அமையும் என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நூற்றுக்கும் அதிகமான அரசு கள்ளர் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தர முன்வராத திமுக அரசு, அவற்றின் பெயரை மாற்றத் தன்னிச்சையாக முடிவு செய்து அறிவித்திருப்பது அச்சமூக மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேதமடைந்த கட்டடங்கள், தரமற்ற உணவு, சுகாதாரமற்ற இருப்பிடம் என அவலமாகக் காட்சியளிக்கும் விடுதிகளைச் சீரமைக்க வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாத திமுக அரசு, விடுதிகளின் பெயர்களை மட்டும் சமூகநீதி விடுதிகள் என மாற்றுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என மாணவ, மாணவியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, கள்ளர் சமுதாய மக்கள் முன்னேற்றத்திற்காகத் தொடங்கப்பட்ட பள்ளிகளும், விடுதிகளும் அதே பெயரிலேயே தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்குவதோடு, அவ்விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ammk TTV Dinakaran condemn to DMK Government


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->