அண்ணாமலையை விடாத அமித் ஷா! பழைய அண்ணாமலையா வாங்க..பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு ஊகங்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன. அவர் பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது சமீபத்திய டெல்லி பயணம் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு அண்ணாமலைக்கு கட்சியிலோ அல்லது மத்திய அரசிலோ முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, அவர் தனது பிறந்தநாளான ஜூன் 4-ஆம் தேதி புதிய அரசியல் முயற்சி குறித்து அறிவிக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகின.

இந்த சூழலில் அண்ணாமலை திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள். அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதில் சொல்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

டெல்லியில் அவர் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்ததுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்புகளில் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அவரது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகும் நோக்கில் ராஜினாமா கடிதம் ஒன்றை அளித்ததாகவும், ஆனால் அதை பாஜக தேசிய தலைமை ஏற்க மறுத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதையும், அவர் கட்சியை விட்டு வெளியேறுவது பாஜக வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் தேசிய தலைமை கவனத்தில் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை கட்சிக்குள் தக்கவைக்க தேசிய அளவிலான பொறுப்பு, மாநிலங்களவை உறுப்பினர் பதவி அல்லது மத்திய அமைச்சரவை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விருப்பங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் இடையிலான கருத்து வேறுபாடுகளை சமரசப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

எனினும், அண்ணாமலை தனது அடுத்தகட்ட அரசியல் முடிவு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. அவர் பாஜகவிலேயே தொடர்வாரா, தேசிய அரசியலில் முக்கிய பொறுப்பு ஏற்கப்போகிறாரா அல்லது புதிய அரசியல் அமைப்பை தொடங்கப்போகிறாரா என்பது குறித்த தெளிவான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலையின் அடுத்த அறிவிப்பு தமிழக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கும் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah who will not give up Annamalai Buy the old Annamalai the BJP is giving away two laddus


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->