மதுரையில் அடியோடு சரிந்த அதிமுக கோட்டை! அதவெகவை நோக்கி நகரும் நிர்வாகிகள்! அதிர்ச்சியில் எடப்பாடி!
AIADMK stronghold in Madurai has completely crumbled Party functionaries are shifting towards the AMMK Edappadi is in shock
தென் தமிழகத்தில் அதிமுகவின் முக்கிய கோட்டையாகக் கருதப்படும் மதுரையில், சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்கு புதிய சவால்கள் உருவாகியுள்ளன. குறிப்பாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருவது, மதுரை அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் மற்றும் குமார் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் எம்.எஸ். பாண்டியன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரும் தவெகவில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகின.
கடந்த சில வாரங்களாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் தவெகவில் இணையக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன. ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், "நான் என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில்தான் பயணிப்பேன்" என்று அவர் வெளிப்படையாக அறிவித்தார்.
இருப்பினும், அவரது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கட்சியை விட்டு வெளியேறி வருவது அதிமுக நிர்வாகிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் மதுரையில் அதிமுகவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஒரு காலத்தில் கட்சியின் வலுவான ஆதரவு தளமாகக் கருதப்பட்ட பல தொகுதிகளில் அதிமுக எதிர்பார்த்த முடிவுகளைப் பெற முடியவில்லை.
மதுரை மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தோல்வியடைந்ததோடு மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். திருமங்கலம் தொகுதியில் ஆர்.பி. உதயகுமாரும் வெற்றி பெற முடியவில்லை. மதுரை வடக்கில் வி.வி. ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் பின்னடைவைச் சந்தித்தனர்.
அதே நேரத்தில், திமுக மற்றும் அதிமுக என இரு பாரம்பரிய கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தமிழக வெற்றிக் கழகம் பல இடங்களில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தவெக அமைப்பை விரிவுபடுத்தும் பொறுப்பு அமைச்சர் நிர்மல்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் உள்ள செல்வாக்கு மிக்க நிர்வாகிகளை தவெகவில் இணைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து, வார்டு, ஒன்றியம், நகராட்சி மற்றும் மாநகராட்சி மட்டங்களில் செல்வாக்கு கொண்ட நிர்வாகிகளை குறிவைத்து தவெக செயல்பட்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மற்ற கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் இணைவது தவெகவின் வளர்ச்சிக்கு உதவியாக பார்க்கப்பட்டாலும், கட்சிக்குள் சில அதிருப்திகளும் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் மக்கள் இயக்கம் மற்றும் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தொடக்க காலம் முதல் பணியாற்றி வரும் சில நிர்வாகிகள், "கட்சி தொடங்கிய நாள் முதல் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல், தற்போது வேறு கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது" என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், புதியதாக இணையும் நிர்வாகிகளுக்கு பதவிகள் வழங்கப்படும் என்ற தகவல்கள் பரவுவது, கட்சிக்குள் கூடுதல் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலே இந்த அரசியல் நகர்வுகளின் மையமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் அனைத்து கட்சிகளும் புதிய நிர்வாகிகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக மதுரை போன்ற முக்கிய மாவட்டங்களில் அதிமுகவின் அமைப்பு பலவீனமடைந்துள்ளதாக கருதப்படும் நிலையில், அந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் தவெக தீவிரமாக செயல்பட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதனால், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக மதுரையில் மேலும் பல அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதிமுக தனது நிர்வாகிகளை தக்க வைத்துக் கொள்ள என்ன நடவடிக்கை எடுக்கிறது, தவெக தனது அமைப்பு வளர்ச்சியை எந்த அளவுக்கு முன்னெடுக்கிறது, திமுக எந்த அரசியல் வியூகத்தை கையாளப் போகிறது என்பதையே அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
English Summary
AIADMK stronghold in Madurai has completely crumbled Party functionaries are shifting towards the AMMK Edappadi is in shock