திமுகவுக்கு மாற்று நாங்க தான்... விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுக ஆர்.பி.உதயகுமார்!
ADMK RP Udhayakumar DMK MK Stalin TVK Vijay
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணைப் பொதுச்செயலர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுகவை வீழ்த்தும் சக்தி அதிமுக மட்டுமே எனத் தெரிவித்தார்.
மதுரை தெப்பக்குளத்தில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 52 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட அதிமுகவும், 75 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட திமுகவும் தமிழக மக்கள் நன்கு அறிந்தவர்கள் என்றார். நிரந்தர வாக்கு வங்கியைக் கொண்ட இயக்கமாக முதலிடத்தில் அதிமுக இருக்கிறது; அதன் பின் திமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.
புதிய அரசியல் அமைப்புகள் பற்றியும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். “இப்போது உருவாகும் கட்சிகள் தேர்வு எழுதாமல் வெற்றி பெறுவேன் என்று நம்புகின்றன. அந்த நம்பிக்கையை வரவேற்கிறோம். ஆனால் பரீட்சையை எழுதட்டும், மக்கள் எந்த மதிப்பெண் தருகிறார்கள் என்பதைப் பார்த்துதான் பேச வேண்டும். இப்போது அவர்கள் இன்னும் படித்து கொண்டிருக்கிறார்கள்,” என்றார்.
மேலும், “திமுகவுக்கு மாற்று சக்தி அதிமுக மட்டுமே. இதுதான் தமிழக மக்கள் பல ஆண்டுகளாக வழங்கி வரும் தீர்ப்பு. 52 ஆண்டுகால வரலாற்றையும் அனுபவத்தையும் அதிமுக பெற்றுள்ளது. கிளைக் கழகங்கள், தொண்டர்கள், மக்கள் ஆதரவு ஆகிய வலிமைகளால் திமுகவை வீழ்த்தும் திறன் அதிமுகவுக்கே உள்ளது” என்று உதயகுமார் வலியுறுத்தினார்.
English Summary
ADMK RP Udhayakumar DMK MK Stalin TVK Vijay