அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை... கூட்டணி குறித்து உடைத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்!
ADMk DMDK Alliance
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் மற்றும் கட்சியின் 21-ஆம் ஆண்டு துவக்கவிழா, மணப்பாறை அருகே முள்ளிப்பாடி முல்லை திடலில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், தவெக தலைவர் விஜய் முதல்வரை அழைக்கும் விதம் குறித்து கருத்து சொல்லவோ, விமர்சிக்கவோ விருப்பமில்லை என்றார்.
“ஒவ்வொருவரும் தங்களது முறையில் பேசுவார்கள், அதில் நாம் தலையிட தேவையில்லை. விஜய் தனது மக்கள் சந்திப்பை தொடங்கியிருக்கிறார், அவருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
கட்சிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து அவர், “20 ஆண்டுகளாகவே இத்தகைய சவால்கள் எங்களுக்கு இருந்து வருகின்றன. எதிா்நீச்சல் போட்டு வெற்றி பெறுவதே மக்களின் அங்கீகாரம் பெறும் வழி. கேப்டன் அதை சினிமாவிலும், அரசியலிலும் நிரூபித்தவர்” என்று குறிப்பிட்டார்.
அதிமுகவுடன் உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அரசியலில் நிரந்தர எதிரி, நண்பர் என்பதில்லை. எங்கள் கவனம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலல்ல, கட்சியின் வளர்ச்சியிலும், அடுத்த தேர்தல் பணிகளிலும் தான் உள்ளது. தற்போது தேமுதிக மூன்றாவது பெரிய கட்சியாக பூத் கமிட்டிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கூட்டணிகள் குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்வோம்” என்றார்.
விஜய் தனது கூட்டங்களில் விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு, “விஜய் அவரை அண்ணன் என அழைக்கிறார், அதனால் நாங்கள் தம்பி என்று அழைக்கிறோம். கேப்டன் யாரின் சொத்தும் அல்ல, தமிழக மக்களின் சொத்து. எனவே அவரது புகைப்படத்தை திரையுலகினரும், அரசியல் கட்சிகளும் பயன்படுத்துவதை எங்கள் தரப்பில் தடுக்கப் போவதில்லை” என பிரேமலதா தெளிவுபடுத்தினார்.