தேர்தலில் போட்டியிட விருப்பமா? மார்ச் 1ம் தேதி கடைசி... அதிமுக வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.!!
ADMK announced nomination form charges
நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள இத்தகைய சூழலில் நாடாளுமன்ற பொது தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தொடங்கிவிட்டன. தமிழகத்தை பொறுத்தவரை பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தனது தேர்தல் பணிகளை மும்முரமாக செயல்படுத்தி வரும் இத்தகைய சூழலில் திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது.

அதேபோன்று தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என திமுக ஏற்கனவே அறிவித்துள்ள இத்தகைய சூழலில் அதிமுகவும் தற்போது விருப்ப மனு கட்டணத்தை அறிவித்துள்ளது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்புக்கிணங்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் தலைமை கழகம் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத் தொகை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொது தொகுதிக்கு 20 ஆயிரம் ரூபாயும் தனி தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாயும் விண்ணப்ப கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் "நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.2.2024 புதன் கிழமை முதல் 1.3.2024 - வெள்ளிக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என அறிவித்துள்ளார்.
English Summary
ADMK announced nomination form charges