மீனவர் நலனுக்கான கட்சி.. மீனவர்கள் நலனுக்காக நான் செயல்படுவேன் – திராவிடக் கட்சிகளை கடும் விமர்சித்த காளியம்மாள்
A party for the welfare of fishermen I will work for the welfare of fishermen Kaliammal strongly criticized Dravidian parties
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரும், மயிலாடுதுறை பகுதியில் மீனவர்களிடையே செல்வாக்கு பெற்ற தலைவருமான காளியம்மாள், மீனவர் நலனுக்கான அமைப்பு அல்லது கட்சியில் விரைவில் இணைவதாக அறிவித்துள்ளார். திராவிடக் கட்சிகள் மீனவர்களை புறக்கணித்துள்ளன என அவர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
நாதகில் சீமானுக்குப் பின் முக்கியமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஒருவராகக் கருதப்பட்ட காளியம்மாள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறையில் போட்டியிட்டு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றதால் கட்சிக்குள் பிரதான முகமாக மாறினார். ஆனால் சீமான்–காளியம்மாள் இடையில் ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து, அவர் கட்சியை விட்டு வெளியேறினார்.
அதன்பின் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் அவரை அணுகியதாக தகவல்கள் வந்தன. ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் தான் விரும்புவதாகக் கூறியதால் பேச்சுவார்த்தை முன்னேறவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், காளியம்மாள் இணையும் புதிய அரசியல் முகாம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனம் திரண்டு வருகிறது.
இந்த நிலையில், ராமேஸ்வரம் பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்ற உலக மீனவர் தின விழாவில் பங்கேற்ற காளியம்மாள், செய்தியாளர்களிடம்:“திராவிடக் கட்சிகள் மீனவர்களுக்கு உரிய அங்கீகாரம் இதுவரை வழங்கவில்லை.”“சுனாமி வீடுகள் புதுப்பிக்கப்படவில்லை.”“கடற்கரை நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒதுக்கி, மீனவர்களை அப்புறப்படுத்த தமிழக அரசு முயல்கிறது.”என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், “மீனவர்களை ஒருங்கிணைக்கும் புதிய அமைப்பு அல்லது கட்சி உருவாகிறது. அதில் என்னை இணைத்துக் கொண்டு, மீனவர்கள் நலனுக்காக நான் செயல்படுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவரின் அடுத்த அரசியல் நகர்வு, குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்களின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
A party for the welfare of fishermen I will work for the welfare of fishermen Kaliammal strongly criticized Dravidian parties