புதிய தலைமைச் செயலகம்.. விஜய் அரசின் அதிரடி திட்டம்! எங்கே அமையப்போகிறது?சட்டசபையில் விஜய் விரைவில் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடரிலேயே புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பது தொடர்பான விரிவான திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புனித ஜார்ஜ் கோட்டையில் நிலவும் கடும் இடநெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் ராணி மேரிக் கல்லூரி வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து ஆட்சிக்கு வந்த மு.கருணாநிதி, ஓமந்தூரார் அரசு தோட்ட வளாகத்தில் பிரம்மாண்டமான புதிய தலைமைச் செயலகத்தை கட்டினார். ஆனால், 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அந்தக் கட்டடம் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தலைமைச் செயலகமும் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்பட்டது.

இந்த நிலையில், மூன்றாவது முறையாக புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கும் முயற்சியை விஜய் அரசு முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், பட்டினப்பாக்கம் மற்றும் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் உள்ளிட்ட பகுதிகள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, முதலமைச்சர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் இந்தப் பணிகளில், முதலமைச்சர், அவரது செயலாளர்கள், சிறப்புப் பணி அதிகாரிகள் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவு ஆகியவற்றை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் அலுவலகம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

கடலை நோக்கிய கிழக்குப் பார்த்த அமைப்பில் முதலமைச்சரின் பிரதான அறை அமைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் முதல் வாரத்திற்குள் புதிய இடத்தில் இருந்து முதலமைச்சர் அலுவலகம் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், முதலமைச்சர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதால் தலைமைச் செயலகத்தில் உள்ள பிற துறைகளின் பணிகள் பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், தலைமைச் செயலக வளாகத்திற்கு வெளியே எந்த அலுவலகமும் மாற்றப்படாது என்றும், முதலமைச்சர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள சில அலுவலகங்கள் வளாகத்திற்குள்ளேயே வேறு இடங்களுக்கு மாற்றப்படலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், புதிய தலைமைச் செயலகத்திற்கான நீண்டகாலத் திட்டம் ஒருபுறமும், முதலமைச்சர் அலுவலகத்தின் தற்காலிக இடமாற்றம் மறுபுறமும் என இரண்டு முக்கிய நிர்வாக நடவடிக்கைகளை விஜய் அரசு ஒரே நேரத்தில் முன்னெடுத்து வருவதாக தெரிகிறது. புதிய தலைமைச் செயலகம் எங்கு அமையப் போகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது, தமிழக அரசியலில் மட்டுமின்றி நிர்வாக வட்டாரங்களிலும் இந்த விவகாரம் முக்கிய கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A new Secretariat Vijay government plans a bold move Where will it be located Vijay to make an announcement in the Assembly soon


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->