இன்று தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம்! கூட்டணிக்கு பெயர், தலைவர் யார்? முதல்வர் விஜய்யின் பிளான் என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு முதல்வர் விஜய் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டணிக்கு பெயர் சூட்டுவது, குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவது மற்றும் கூட்டணியின் நிர்வாக பொறுப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்தது.

இதில் காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் இடம் வழங்கப்பட்டது. அதேநேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்றும், அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்றும் தெரிவித்திருந்தன.

தவெக தலைமையில் முறையான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 1ஆம் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில், தவெக அரசுக்கு ஆதரவளித்த கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை. இதையடுத்து, கூட்டணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தற்போது இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தனர். இந்த அழைப்பை ஏற்று காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய கூட்டத்தில் முக்கியமாக கூட்டணிக்கு ஒரு பெயரை தேர்வு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இணைந்து செயல்படுவதற்கான குறைந்தபட்ச செயல்திட்டமும் வகுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணியின் ஒருங்கிணைந்த அரசியல் செயல்பாடுகள், எதிர்கால தேர்தல் வியூகம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாகவும் தலைவர்கள் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, தவெக தலைமையிலான கூட்டணிக்கு முதல்வர் விஜய்யே தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதேபோல், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை உருவாக்கி, கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களுக்கு அந்த பதவிகளை வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெறலாம் என கூறப்படுகிறது.

குறிப்பாக, கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அல்லது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்படலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் அடிபடுகிறது.

இதற்கிடையே, விஜய்யை 2029ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பாக தவெக மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள சூழலில் இன்றைய கூட்டம் நடைபெறுவது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என்ற நிலைப்பாடு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தவெக தரப்பில் விஜய்யை தேசிய அளவில் முன்னிறுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்து ஆலோசனை நடத்த உள்ளதால், இன்றைய கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்தும் மறைமுகமாக விவாதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

கூட்டணிக்கு பெயர், நிர்வாக பொறுப்புகள், குறைந்தபட்ச செயல்திட்டம் என பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று மாலை நடைபெறும் இந்தக் கூட்டம் தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A meeting of TVK alliance parties is taking place today What will the alliance be named and who will lead it What is Chief Minister aspirant Vijay plan


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->