திருட்டுக்கு பயந்து ஸ்கார்பியோ காரை வீட்டின் 2வது மாடியில் தூக்கிச் வைத்த நபர்! எங்கு நடந்தது தெரியுமா?
A man hoisted his Scorpio car to the second floor of his house for fear of theft Do you know where this happened
கார் திருடு போகாமல் இருக்க பாதுகாப்பான இடத்தில் நிறுத்துவது வழக்கம். ஆனால், பீகாரை சேர்ந்த ஒருவர் தனது புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ காரை திருட்டில் இருந்து பாதுகாக்க செய்த வித்தியாசமான காரியம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது காரை கிரேன் மூலம் வீட்டின் இரண்டாவது மாடிக்கு தூக்கிச் சென்று மேற்கூரையில் நிறுத்தியுள்ளார்.
இந்தியர்களுக்கு கார் என்பது வெறும் வாகனம் மட்டுமல்ல; பலருக்கு அது ஒரு உணர்வுபூர்வமான விஷயமாகவும் இருக்கிறது. நீண்ட நாட்கள் சேமித்து, பார்த்துப் பார்த்து காரை வாங்குபவர்கள், அதை பாதுகாப்பாக வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆனால், பீகாரை சேர்ந்த ஒருவர் செய்துள்ள காரியம் அவற்றையெல்லாம் தாண்டியதாக அமைந்துள்ளது.
பீகாரின் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவர் சமீபத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை வாங்கியதாக கூறப்படுகிறது. அவர் இஸ்ரேலில் பணியாற்றி வருவதால், தான் வெளிநாட்டில் இருக்கும் காலத்தில் காரை பராமரிக்கும் பொறுப்பை ஓட்டுநரிடம் ஒப்படைத்திருந்ததாக தெரிகிறது.
ஆனால், சில மாதங்களிலேயே அந்த ஓட்டுநர் வேலையை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தான் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் காரின் பாதுகாப்பு குறித்து மனோஜ் யாதவுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.
காரை பாதுகாப்பாக வைத்திருக்க வேறு வழிகளை யோசித்த மனோஜ் யாதவ், இறுதியில் சற்றும் எதிர்பாராத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. வீட்டின் தரைத்தளத்திலோ அல்லது கார் பார்க்கிங்கிலோ நிறுத்துவதற்கு பதிலாக, காரையே வீட்டின் மேற்கூரைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார்.
இதற்காக கிரேன் வரவழைக்கப்பட்டு, ஸ்கார்பியோ கார் அதில் கட்டப்பட்டு வீட்டின் இரண்டாவது மாடிக்கு மேலே தூக்கிச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஸ்கார்பியோ கார் கிரேனில் கட்டப்பட்டு காற்றில் தொங்கிய நிலையில் காணப்படுகிறது. பின்னர் கிரேன் மூலம் கார் மெதுவாக இரண்டு மாடி வீட்டின் மேற்கூரையை நோக்கி தூக்கிச் செல்லப்படுகிறது.
சரியான இடத்திற்கு காரை கொண்டு சென்ற பிறகு, மிகவும் கவனமாக மேற்கூரையில் இறக்குகின்றனர். இறுதியில் வீட்டின் மாடியில் ஸ்கார்பியோ கார் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சிதான் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த சம்பவத்தை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். “கார் திருட்டு போகாமல் இருக்க வீட்டுக்குள் வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், வீட்டின் மாடிக்கே கொண்டு சென்றுவிட்டார்களே” என பலர் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில், கிரேன் மூலம் இவ்வாறு காரை வீட்டின் மேற்கூரைக்கு தூக்கிச் செல்வது பாதுகாப்பான நடவடிக்கையா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோன்ற செயல்களை மேற்கொள்ளும்போது கட்டிடத்தின் தாங்கும் திறன் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.இதுதொடர்பாக மனோஜ் யாதவ் தரப்பில் இதுவரை எந்தவொரு விளக்கமும் வெளியாகவில்லை.
இந்திய கார் சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக உள்ளது. இரண்டு வேரியண்டுகளில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் ஆரம்ப விலை சுமார் ரூ.13.37 லட்சம் என கூறப்படுகிறது.
டாப்-எண்ட் ‘S11’ வேரியண்ட்டின் விலை சுமார் ரூ.17.40 லட்சம் வரை செல்கிறது. விலை சற்று அதிகமாக இருந்தாலும், ஸ்கார்பியோவுக்கு இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
வலுவான கட்டமைப்பு, உயரமான இருக்கை அமைப்பு மற்றும் கரடுமுரடான சாலைகளிலும் பயணிக்கும் திறன் உள்ளிட்ட காரணங்களால் ஸ்கார்பியோ பல ஆண்டுகளாக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளது. இந்நிலையில், ஒரு ஸ்கார்பியோ உரிமையாளர் அதை பாதுகாப்பதற்காக வீட்டின் மாடிக்கே கொண்டு சென்ற சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
English Summary
A man hoisted his Scorpio car to the second floor of his house for fear of theft Do you know where this happened