2026-27 மத்திய பட்ஜெட்: தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன? முழுமையான லிஸ்ட் இதோ!
2026 27 Union Budget What are the schemes announced for Tamil Nadu Here is the complete list
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு, தொழில்துறை மற்றும் கலாச்சார வளர்ச்சியை நோக்கி சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு பெரிய அளவிலான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், இந்த பட்ஜெட் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்ற கலவையான கருத்துகள் எழுந்துள்ளன.
போக்குவரத்து துறையில், தமிழகத்தின் நீண்ட நாள் கனவான அதிவேக ரயில் திட்டத்திற்கு இந்த பட்ஜெட் பச்சைக்கொடி காட்டியுள்ளது. நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு அதிவேக ரயில் வழித்தடங்களில், சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – ஹைதராபாத் ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இது தென்னிந்தியாவின் முக்கிய பொருளாதார மையங்களை இணைப்பதோடு, பயண நேரத்தை கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்தும் ஆதிச்சநல்லூர், இந்தியாவின் 15 முக்கிய தொல்லியல் சுற்றுலா தலங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே உருவாகி வரும் அருங்காட்சியகத்துடன் இணைந்து, ஒரு “அனுபவ அடிப்படையிலான கலாச்சார மையம்” அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி பகுதிகளை மக்கள் நேரடியாகப் பார்வையிட நடைபாதைகள், நவீன டிஜிட்டல் விளக்க மையங்கள் உருவாக்கப்படும். இருப்பினும், தமிழக அரசு நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கீழடி தொல்லியல் தளத்திற்கு எந்த அறிவிப்பும் இடம்பெறாதது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்துறையில், இந்தியாவின் எதிர்கால தொழில்நுட்ப தேவைகளை கருத்தில் கொண்டு, தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் “அரிய கனிம வழித்தடம்” அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மின்சார வாகனங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கு தேவையான முக்கிய கனிமங்களைச் சுத்திகரிக்கும் மையமாக தமிழகத்தை மாற்றும் என கூறப்படுகிறது. மேலும், ஒடிசாவின் தால்சேர் முதல் தமிழகத்தின் ஆம்பூர் வரை ஒரு பிரத்யேக உள்நாட்டு நீர்வழிப் பாதை அமைக்கும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா துறைகளில், பழவேற்காடு ஏரியில் மூன்று புதிய பறவை கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும் என்றும், பொதிகை மலையில் சூழல் நட்பு மலையேற்றத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில், கடற்கரைப் பகுதிகளில் தென்னை சாகுபடியை ஊக்குவிக்கும் புதிய திட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் பழைய மரங்களுக்கு பதிலாக அதிக மகசூல் தரும் கன்றுகள் நடப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்.
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு, “ஜவுளித் துறைக்கான ஒருங்கிணைந்த திட்டம்” ஒரு முக்கிய மீட்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. உற்பத்திச் செலவை குறைக்க நவீன இயந்திரங்கள் மற்றும் உள்நாட்டு மூலப்பொருட்கள் ஊக்குவிக்கப்படுவதால், அதிக வரி விதிப்பையும் மீறி இந்திய ஆடைகள் உலக சந்தையில் போட்டியிட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிவேக ரயில் மற்றும் ஆதிச்சநல்லூர் அறிவிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், தமிழக அரசு கோரியிருந்த கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதல் நிதி போன்ற முக்கிய கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 2026-27 மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டுக்கு சில முக்கிய வாய்ப்புகளைத் திறந்தாலும், தேர்தல் நெருங்கும் சூழலில் எதிர்பார்த்த அளவிலான பெரிய அறிவிப்புகள் இல்லை என்ற விமர்சனங்களும் வலுத்து வருகின்றன.
English Summary
2026 27 Union Budget What are the schemes announced for Tamil Nadu Here is the complete list