உங்க உடம்புக்கு எது செட் ஆகும்...? தாவர மற்றும் விலங்கு புரோட்டீன்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் இதோ...!
Which one right for your body Here difference between plant and animal proteins
புரதச்சத்து என்பது மனித உடலின் வளர்ச்சி, பழுது சரிசெய்தல் மற்றும் உடல் இயக்கங்களை சீராக வைத்திருக்க உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளில் ஒன்றாகும். தசைகள், தோல், எலும்புகள், ஹார்மோன்கள், நொதிகள் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாடுகள் அனைத்தும் புரதச்சத்தை சார்ந்தே இயங்குகின்றன.
அதனால் தினசரி உணவுமுறையில் போதுமான அளவு புரதம் இடம்பெற வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.குறிப்பாக உடல் எடையை கட்டுப்படுத்த முயற்சிப்பவர்கள், உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மற்றும் நீரிழிவு போன்ற நீடித்த உடல்நலப் பிரச்சனைகளுடன் வாழ்பவர்கள் கார்போஹைட்ரேட் அளவை குறைத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகப்படுத்துவது பலனளிக்கக்கூடும்.

“சைவ புரதமே பாதுகாப்பானது”, “அசைவ புரதம் உடலுக்கு தீங்கு” என்ற பொதுவான கருத்துக்கள் பரவலாக இருந்தாலும், உண்மையில் இரு வகை புரதங்களுக்கும் தனித்துவமான பலன்களும் சில வரம்புகளும் இருப்பதாக ஊட்டச்சத்து வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.முட்டை, மீன், கோழி இறைச்சி, பால், பனீர் போன்ற விலங்கு சார்ந்த உணவுகள் “முழுமையான புரதங்கள்” என அழைக்கப்படுகின்றன. காரணம், மனித உடலுக்கு அவசியமான அனைத்து அமினோ அமிலங்களும் அவற்றில் சமநிலையாக காணப்படுகின்றன.
மேலும் இவ்வகை புரதங்கள் உடலால் எளிதில் உறிஞ்சப்படுவதால் தசை வளர்ச்சி, உடல் திசு புதுப்பிப்பு மற்றும் ஹார்மோன் உற்பத்தி போன்ற செயல்பாடுகளை வேகமாக ஆதரிக்கின்றன.அதோடு வைட்டமின் B12, இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துகளும் அசைவ உணவுகளில் அதிகமாக காணப்படுவதால் மூளை செயல்திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட உதவுகின்றன.
எனினும் சில அசைவ உணவுகளில் செறிவூட்டப்பட்ட கொழுப்பு அதிகமாக இருப்பதால், அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் இதயநோய் அபாயம் உயரக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.மறுபுறம் பருப்பு வகைகள், பயறு, தானியங்கள், நட்ஸ், விதைகள், டோஃபு மற்றும் காய்கறிகள் போன்ற தாவர அடிப்படையிலான புரதங்கள் நார்ச்சத்து நிறைந்தவையாக இருப்பதால் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும், நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
ஆனால் பெரும்பாலான சைவ புரதங்களில் அனைத்து அவசியமான அமினோ அமிலங்களும் முழுமையாக இல்லாததால், பல்வேறு உணவுகளை இணைத்து எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. உதாரணமாக பருப்பு மற்றும் அரிசி, சோயா மற்றும் தானியங்கள் போன்ற சேர்க்கைகள் உடலுக்கு நல்ல அமினோ அமில சமநிலையை வழங்குகின்றன.
மேலும் தாவர புரதங்களில் புரதச்சத்து அடர்த்தி குறைவாக இருப்பதால், தேவையான அளவு புரதத்தைப் பெற அதிகளவு உணவை உட்கொள்ள வேண்டிய நிலை உருவாகலாம்.ஒருவரின் வயது, உடல் எடை, தினசரி உடல் உழைப்பு, உடல்நல நிலை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொறுத்து புரதத் தேவையும் மாறுபடும்.
எனவே “ஒரே வகை புரதமே சிறந்தது” என்று ஒரே முடிவுக்கு வர முடியாது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.சமநிலையான உணவுக் கட்டமைப்பில் சைவ மற்றும் அசைவ புரதங்களை சரியான விகிதத்தில் இணைத்து எடுத்துக்கொள்வதே நீடித்த உடல்நலத்திற்கும் முழுமையான ஆரோக்கியத்திற்கும் சிறந்த தேர்வாகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary
Which one right for your body Here difference between plant and animal proteins