சுவையான தென்னாட்டு நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?..!! - Seithipunal
Seithipunal


கருவாட்டு குழம்பு என்று கூறினாலே வாயில் எச்சில் ஊராத ஆட்களே இருக்க மாட்டார்கள் என்று தான் கூற வேண்டும். பழைய சாதமும், முன்தினம் வைக்கப்பட்ட கருவாட்டு குழம்பை சுண்டவைத்து சாப்பிடும் சுவையும் கிராமத்தில் இருக்கும் நபர்களுக்கு மிகவும் பிடித்த அமிர்தமாகும். நகர் புறங்களில் இருக்கும் பலருக்கும் இதுபோன்று சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். சுவையான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி என்பது குறித்து காண்போம். 

தேவையான பொருட்கள்: 

நெத்திலி கருவாடு - 100 கிராம், 
சின்ன வெங்காயம் - 300 கிராம், 
வெள்ளைப்பூண்டு - இரண்டு,
மிளகாய் - நான்கு, 
தேங்காய் - ஒன்று, 
வாழைக்காய், முருங்கைக்காய் - ஒன்று அல்லது இரண்டு, 
கத்தரிக்காய் - விருப்பத்திற்கேற்ப (அதிகபட்சம் 400 கிராம்),
கறிவேப்பில்லை, உப்பு, மசால்பொடி, கடுகு உளுந்து - தேவையான அளவு.. 
புளி - 50 கிராம், 
மிளகு, வெந்தயம் - சிறிதளவு.

செய்முறை: 

முதலில் எடுத்துக்கொண்ட புளியை நீரில் ஊறவைத்து, கரைசலாக எடுத்து கொள்ளவும். பின்னர் கருவாட்டை 20 நிமிடங்களுக்கு நீரில் ஊறவைத்து, கருவாட்டின் தலைகளை நீக்கி சுத்தம் செய்யவும். 

கருவாட்டின் தலையை நீக்கும் போது, கருவாட்டின் குடல் பகுதிகளையும் சேர்ந்து நீக்கி கொள்ளவும். சரிவர குடல் நீக்கப்படாத பட்சத்தில் குழம்பு கசப்பு தன்மையை வெளிப்படுத்தும். தலைகளை நீக்கி சுத்தம் செய்த பின்னர், கருவாட்டை ஒரு சட்டியில் போட்டு, தூள் உப்பு அல்லது கல் உப்பை சேர்த்து நன்கு அலசவும். 

ஏனெனில் கருவாட்டில் சிறிய அளவிலான மணற்துகள்கள் இருக்க அதிகளவு வாய்ப்புள்ளது. முடிந்தவரை நான்கு முதல் ஐந்து முறை வெறும் நீரில் நன்கு அலசிவிட்டு, இறுதியாக உப்பு சேர்த்து கருவாட்டை அலச வேண்டும். மிளகு மற்றும் வெந்தயத்தை தனியாக வறுத்து தனியே பொடியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். 

பின்னர் எடுத்துக்கொண்ட வெங்காயம், கத்தரிக்காய், முருங்கைக்காய், வாழைக்காய்களை நறுக்கி வைத்து, முதலில் கடுகு மற்றும் உளுந்து போட்டு, வெள்ளை பூண்டை சேர்க்கவும். பின்னர் கருவேப்பில்லையை சேர்த்து, ஒன்றன் பின்னர் ஒன்றாக காய்கறிகளை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கிய பின்னர், புளிக்கரைசலை சேர்க்கவும். 

இதன்பின்னர் அரைத்து வைத்த தேங்காய், தேவையான அளவு மசால் பொடி, உப்பு, பொடியாக்கப்பட்ட மிளகு மற்றும் வெந்தயம் போன்றவற்றை சேர்க்கவும். குழம்பு முக்கால் வாசி கொதிக்கும் வரை காத்திருக்கவும். குழம்பு ஓரளவு கொதிக்க துவங்கியதும், அதில் கருவாட்டை சேர்த்து 20 நிமிடத்திற்குள் இறக்கி விடலாம். 

முதல்நாள் வைத்த குழம்பை விட மறுநாள் கருவாட்டு குழம்பின் சுவையே தனி.. நாம் சேர்க்கும் புளிக்கரைசலை பொறுத்து இரண்டு நாட்கள் வரை சூடு செய்து சாப்பிட்டுக்கொள்ளலாம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make karuvadu kuzhambu


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal