பெல்ட் அண்ட் ரோடு அஸ்திரத்தைக் கையில் எடுத்த ஷி ஜின்பிங்...! வடகிழக்கு மாநில எல்லையில் இந்தியாவை குறிவைக்கும் சீனா...! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் மிக முக்கியமான மூலோபாய நிலப்பகுதியான சிலிகுரி காரிடார் எனப்படும் ‘சிக்கன்ஸ் நெக்’ பகுதிக்கு மிக அருகில், வங்காளதேசத்தின் தீஸ்தா நதி ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் மறுசீரமைப்புத் திட்டத்தை சீனாவின் ஒத்துழைப்புடன் செயல்படுத்துவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த நடவடிக்கை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லையோர பாதுகாப்பு தொடர்பாக புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.வங்காளதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது, இந்தத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் தொடக்கப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த தீஸ்தா திட்டம் மீண்டும் முழு வேகத்தில் முன்னேறத் தொடங்கியுள்ளது.வங்காளதேசத்தின் வடக்குப் பகுதியில் பாயும் தீஸ்தா நதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

வெள்ள பாதிப்புகளை கட்டுப்படுத்துதல், நதிக்கரைகளை பலப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துதல், புதிய நகர்ப்புற வளர்ச்சியை உருவாக்குதல் மற்றும் பொருளாதார மையங்களை அமைத்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாக உள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான நதிப்பகுதி தூர்வாரப்படுவதுடன், 171 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு மீட்கப்பட்டு, அங்கு புதிய நகரங்கள், நவீன சாலை வசதிகள், தொழில் வளாகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா இந்தத் திட்டத்தை பல ஆண்டுகளாக முன்னெடுக்க முயற்சித்தபோதிலும், இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் இருநாடுகளின் நல்லுறவை கருத்தில் கொண்டு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு இறுதி ஒப்புதலை வழங்காமல் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது.

ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பதவியேற்றுள்ள பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசு, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இணைந்து, 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தின் கீழ் தீஸ்தா திட்டத்தை விரைவாக செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீஸ்தா திட்டம் அமையவுள்ள பகுதி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வெறும் 22 கிலோமீட்டர் அகலமுள்ள சிலிகுரி காரிடார் அருகே அமைந்துள்ளது. இந்த குறுகிய நிலப்பகுதி இந்தியாவின் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் ராணுவ தளவாட நகர்வுகளுக்கு உயிர்நாடியாகக் கருதப்படுகிறது.இந்தப் பகுதியில் சீன ஆதரவுடன் நடைபெறும் மிகப்பெரிய கட்டுமானப் பணிகள், எதிர்காலத்தில் சீனாவின் தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்பு செல்வாக்கை இந்திய எல்லைக்கு மிக அருகில் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் பாதுகாப்பு வட்டாரங்களில் நிலவி வருகிறது.

மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்தவுள்ள பவர் சீனா நிறுவனம், சீன அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனமாக இருப்பதால், அதன் பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் நீண்டகாலம் எல்லைப்பகுதியில் செயல்படும் வாய்ப்பு உருவாகலாம் என்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தீஸ்தா திட்டத்தில் சீனாவின் பங்களிப்பைத் தவிர்க்கும் நோக்கில், கடந்த 2024-ஆம் ஆண்டிலேயே இந்தியா, இந்தத் திட்டத்திற்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி ஆதரவை தானே வழங்கத் தயாராக இருப்பதாக வங்காளதேசத்திடம் முன்மொழிந்திருந்தது. இருப்பினும், வங்காளதேசம் தற்போது சீனாவுடன் இணைந்து திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்காளதேசத்துடன் இந்தியா மேற்கொண்டு வரும் அனைத்து வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு திட்டங்களும் இருதரப்பு புரிந்துணர்வின் அடிப்படையில் தொடர்ந்து மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீஸ்தா நதி திட்டம் தொடர்பாக அண்மையில் ஏற்பட்டுள்ள அனைத்து முன்னேற்றங்களையும் இந்தியா மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், எதிர்கால வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு அணுகுமுறை மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்பான முடிவுகளில் இந்த மாற்றங்கள் முக்கிய காரணியாக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா–சீனா செல்வாக்குப் போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுவதுடன், இந்தியாவின் எல்லையோர பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் கணக்கீடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முன்னேற்றமாகவும் மதிப்பிடப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Xi Jinping takes up Belt and Road Initiative China targets India northeastern state border


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->