காரசார விவாதங்களுடன் நிறைவு பெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்...!
winter session Parliament concluded heated debates
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி, 19-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 15 அமர்வுகள் கொண்ட இந்த கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்களில், சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், 3-ஆம் தேதி முதல் வழக்கமான அலுவல்கள் தொடங்கின.இந்தக் கூட்டத்தொடரின் போது, ‘வந்தே மாதரம்’ பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இரு அவைகளிலும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

இதேபோல், அணுசக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட முக்கிய மசோதாக்களும் மக்களவை மற்றும் மேல்சபையில் நிறைவேற்றப்பட்டன.நேற்றைய தினம் மக்களவையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட ‘விக்சித் பாரத் – ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (V.P–G RAM G)’ என்ற புதிய சட்ட மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை மக்களவை கூடியதும், குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெறுவதாகவும், அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். மேலும், இந்த கூட்டத்தொடரின் போது சபையின் செயல்பாடு 111 சதவீதம் என உயர்ந்த அளவில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மேல்சபை இன்று காலை கூடியபோது, அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், 15 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்பட்ட சட்டமியற்றல் பணிகள் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்த சுருக்கத்தை வாசித்தார். பின்னர், மேல்சபையையும் காலவரையின்றி ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.
இதன் மூலம், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. நிறைவு நிகழ்வின் போது, ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது என்னவெனில், இன்று டெல்லி காற்று மாசு தொடர்பான விவாதம் நடைபெற இருந்த போதிலும், அது விவாதிக்கப்படாமலேயே கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.
English Summary
winter session Parliament concluded heated debates