பீகார் தேர்தலுக்குப் பிறகு நிதிஷ்குமார் முதல்வர் பதவி பறிப்பு? என்டிஏ கூட்டணி நிலைமை? – உடைத்து பேசிய அமித் ஷா - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அங்கு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த ஒரு தகவலில், “என்டிஏ கூட்டணி வென்றாலும், நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் தொடர மாட்டார்” என கூறப்பட்டிருந்தது. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது பீகாரில், நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியூ-பாஜக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், என்டிஏ உள்ளே கருத்து வேறுபாடுகள் உள்ளன என்ற ஊடகச் செய்திகளை அமித் ஷா முழுமையாக மறுத்துள்ளார்.

இந்தியா டுடே ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:“பீகார் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஆனால் முதல்வர் யார் என்பது குறித்து முடிவு தேர்தல் முடிந்த பிறகே கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து எடுப்பார்கள். இப்போதைக்கு நிதிஷ் குமார் தலைமையில்தான் நாங்கள் போட்டியிடுகிறோம். 2020 தேர்தலுக்குப் பிறகும் நிதிஷ் குமாரே நரேந்திர மோடியை அணுகி, பாஜக அதிக இடங்களைப் பெற்றதால் முதல்வர் பதவி பாஜகவுக்கே தகுதியானது என்று கூறினார். இருப்பினும், அவரின் அனுபவத்தையும் மரியாதையையும் கருத்தில் கொண்டு அவரே தொடர வேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம்,” என்றார்.

அதே நேரத்தில் நிதிஷ் குமார் அடிக்கடி கூட்டணிகளை மாற்றுவது குறித்த கேள்விக்கு அமித் ஷா, “அவர் காங்கிரஸுடன் வெறும் 2.5 ஆண்டுகள் மட்டுமே இருந்தார். அவரது முழு அரசியல் வாழ்க்கையும் காங்கிரஸுக்கு எதிராகவே அமைந்துள்ளது. 1974இல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கத்தில் அவர் முக்கிய பங்கு வகித்தார்” என பதிலளித்தார்.

மேலும், “நிதிஷ் குமார் உடல்நிலை சரியில்லை” என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அவர் மறுத்தார். “நான் அவருடன் நேரிலும், தொலைபேசியிலும் பலமுறை பேசியுள்ளேன். அவரின் உடல்நிலை நன்றாகவே உள்ளது. வயது முதிர்ச்சியால் சிறு சிக்கல்கள் ஏற்படலாம், ஆனால் அதுவே அவரின் ஆட்சித் திறனை பாதிக்கவில்லை,” என்று விளக்கமளித்தார்.

அதே நேரத்தில், மகாகூட்டணியை கடுமையாக விமர்சித்த அமித் ஷா, “லாலு பிரசாத் யாதவின் ஆட்சியை பீகார் மக்கள் மறந்துவிடவில்லை. காங்கிரஸ் கட்சி எப்போதும் தங்கள் கூட்டணிக் கட்சிகளை மதிக்காது; அதனால் தான் இன்று அந்த நிலைக்கு வந்துள்ளது,” என கடுமையாக தாக்கினார்.

இதனால், பீகார் தேர்தல் முன்பே ஏற்பட்டிருந்த சந்தேகங்களுக்கு அமித் ஷா அளித்த இந்த விளக்கம் அரசியல் சூழலை மேலும் தெளிவாக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will Nitish Kumar be stripped of his CM post after Bihar elections What is the status of the NDA alliance Amit Shah speaks out


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->