கொல்கத்தாவில் பதற்றம்; சாலையோர தொழுகைக்கு கட்டுப்பாடு; போராட்டத்தில் இறங்கிய முஸ்லிம்கள்; 40 துணை ராணுவப் படை குவிப்பு..!
Violence Erupts During Protest Against Restrictions on Roadside Prayers in Kolkata
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு, முதன்முறையாக பாஜக அரசு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுள்ளார்.
இவர் பதவியேற்ற நாள் முதல் அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், பதவியேற்ற புதிய பாஜக அரசு, மாநிலத்தில் பொது இடங்களில் தொழுகைக் கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அத்துடன், பாங்கு மற்றும் ஈத் குர்பானி (தியாகம்) குறித்த வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு, கொல்கத்தாவில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை அரசு தொடங்கிய நிலையில், அதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
மாநிலத்தில் சாலையோர தொழுகைக்கான கட்டுப்பாடுகள் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளின்போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள் குறிவைக்கப்படுவதாக கூறி, அதனை கண்டித்து, கொல்கத்தாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியும், மிகவும் பரபரப்பான சந்திப்புகளில் ஒன்றான பார்க் சர்க்கஸ் செவன் பாயிண்ட் சந்திப்புக்கு அருகே போராட்டக்காரர்கள் கூடி சாலைகளை மறித்து கோஷங்களை எழுப்பியுள்ளனர். அவர்களைக் கலைப்பதற்காகப் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், அங்கு வன்முறை வெடித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, கூட்டத்தைக் கலைத்து அப்பகுதியில் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்காக கொல்கத்தா போலீசார் தடியடி நடத்திய நிலையில் வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையில் குறைந்தது 10 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ள நிலையில், மேலும் வன்முறை தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
.இந்த வன்முறையைத் தொடர்ந்து, பார்க் சர்க்கஸ், தில்ஜாலா மற்றும் பதற்றமானதாகக் கருதப்படும் அருகிலுள்ள பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் சுவேந்து அதிகாரி கூறுகையில், ''போராட்டக்காரர்கள் தங்கள் பதில்களைக் கோரலாம், அவர்களைத் திருப்திப்படுத்துவதும் உரிய பதில்களை வழங்குவதும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் பொறுப்பாகும். அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இருப்பினும், ஸ்ரீநகரில்கூட மக்கள் கூடி, மத முழக்கங்களை எழுப்பி, கற்களை எறிவது நின்றுவிட்டது.
மேற்கு வங்கத்திலும் இதுபோன்ற விஷயங்கள் நிறுத்தப்பட வேண்டும். மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, தற்போது இங்கு பணியில் உள்ள 40 துணை ராணுவப் படைப் பிரிவுகளை மாநிலத்தில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Violence Erupts During Protest Against Restrictions on Roadside Prayers in Kolkata