விஐபி டிக்கெட்டுகள்: ரூ.10,000 செலுத்தினால் உடனடி தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!
Tirupati Devasthanams announces instant darshan for paying Rs 10000 for VIP tickets
விஐபி டிக்கெட்டுகள் ஒதுக்கீடு அதிகரிக்க திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.இந்த கோயிலில் எம்எல்ஏ., எம்பி., உள்ளிட்டோரின் சிபாரிசு கடிதம் மூலம் விஐபி டிக்கெட் வழங்கப்படுகிறது. அத்துடன், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்தாலும் ஒருமுறை ஒரு பக்தர் என வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில், விஐபி சேவையில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இவ்வாறு விஐபி டிக்கெட்டுகள் பெற்றாலும் மறுநாள் காலையில்தான் அவர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். எனவே இதுபோன்ற இன்னல்களை தவிர்க்கவும், எந்தவித சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் டிக்கெட் பெறும் வகையில் ஸ்ரீவாணி அறக்கட்டளை சார்பில் விஐபி டிக்கெட் வழங்கப்படுகிறது.
அதாவது, ஒரு நாளைக்கு 1500 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2000 டிக்கெட்டுகளாக அதனை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. குறித்த டிக்கெட்டுகள் திருமலை மற்றும் ரேணிகுண்டா விமான நிலையங்களில் வழங்கப்படுகிறது.

பக்தர்கள் திருமலைக்கு நேரில் வந்து நன்கொடை செலுத்தி முன்பதிவு ஒதுக்கீட்டின் கீழ் விஐபி தரிசன டிக்கெட் பெற்றால் உடனடியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதுவரை ஸ்ரீவாணி அறக்கட்டளை விஐபி டிக்கெட் பெற்ற பக்தர்கள் காலையில் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், இனி மாலையிலும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் காலையில் ஸ்ரீவாணி டிக்கெட் பெற்றால் அன்று மாலையே தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் மேலும் தெரிவித்துள்ளது.
English Summary
Tirupati Devasthanams announces instant darshan for paying Rs 10000 for VIP tickets