ஜன் விஸ்வாஸ் மசோதா 2026; 79 மத்திய சட்டங்களில் அதிரடி மாற்றம் செய்துள்ள மத்திய அரசு..!
The Central Government has implemented sweeping changes across 79 Central laws through the Jan Vishwas Bill 2026
மத்திய பாஜக அரசின் மிக முக்கியமான சட்ட சீர்திருத்தங்களில் ஒன்றாகக் கருதப்படும் 'ஜன் விஸ்வாஸ் (சட்ட விதிகளின் திருத்தம்) மசோதா, 2026', இந்தியாவில் நிர்வாகம் மற்றும் வணிகம் செய்யும் முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 2026-இன் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, 'நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை' நோக்கிய மைல் கல் என்று பாராட்டப்படுகிறது.
இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் 23 அமைச்சகங்களின் கீழ் வரும் 79 மத்திய சட்டங்களில் உள்ள 784 விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இதில், முக்கிய அம்சமாக, 717 சட்ட விதிகள் குற்றமற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. அதாவது, சிறிய அளவிலான தொழில்நுட்பத் தவறுகள் அல்லது நடைமுறைப் பிழைகளுக்காக இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறைத்தண்டனை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன.
அதற்குப் பதிலாக, அபராதங்கள், எச்சரிக்கைகள் அல்லது நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் மட்டுமே இனிமேல் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது சாதாரண வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர் மத்தியில் நிலவி வந்த தேவையற்ற பயத்தைப் போக்க உதவும் வகையில் உள்ளது.
இந்த மசோதாவில் உள்ள மீதமுள்ள 67 விதிகள், சாதாரண குடிமக்களின் 'வாழ்க்கையை எளிதாக்குவதை' நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏப்ரல் 01-ஆம் தேதி மக்களவையிலும், ஏப்ரல் 02 மற்றும் 03-ஆம் தேதிகளில் மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தை "பயத்தை அடிப்படையாகக் கொண்ட காலாவதியான நிர்வாக முறையில் இருந்து, நவீன காலத்திற்கு ஏற்ற நம்பிக்கை சார்ந்த நிர்வாக முறைக்கு மாறுவதற்கான ஒரு முயற்சி" என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இதன் மூலம் தேவையற்ற நீதிமன்ற வழக்குகள் குறைவதுடன், இந்தியாவில் தொழில் தொடங்குவதும், நடத்துவதும் முன்பை விட மிகவும் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதாவின் நான்கு முக்கிய அம்சங்கள் பின்வருமாறு-
எச்சரிக்கை முறை (Warning-First):
முதல்முறை தவறு செய்யும் போது, உடனடியாக அபராதம் விதிக்காமல், அரசு தரப்பில் எச்சரிக்கை அல்லது அறிவுரை வழங்கப்படும். மீண்டும் தவறு செய்தால் மட்டுமே தண்டனை உண்டு.
அபராதமாக மாற்றம்:
தொழில்நுட்பப் பிழைகளுக்காக வழங்கப்பட்டு வந்த சிறைத்தண்டனை நீக்கப்பட்டு, அதற்குப் பதில் நியாயமான அளவிலான பண அபராதம் (Civil Penalty) விதிக்கப்படும்.
வேகமான தீர்வு:
வழக்குகளை நீதிமன்றத்திற்கு இழுக்காமல், இதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மூலம் விரைவாகத் தீர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 5 கோடி நிலுவை வழக்குகளின் சுமையைக் குறைக்க உதவும்.
பணவீக்கத்திற்கேற்ப அபராதம்:
அபராதத் தொகையானது ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் 10% உயர்த்தப்படும். இது அபராதத் தொகையை நடைமுறைக்கு ஏற்றதாக வைத்திருக்கும்.
English Summary
The Central Government has implemented sweeping changes across 79 Central laws through the Jan Vishwas Bill 2026