ஹிந்து கடவுள்கள் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு; தெலுங்கானா முதல்வருக்கு எதிராக வலுக்கும் கண்டனம்..!
Strong condemnation against Telangana Chief Minister for his controversial remarks about Hindu gods again
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நிகழ்ச்சி ஒன்றில் ஹிந்து கடவுள் குறித்து, சர்ச்சையாக பேசியுள்ளமைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க கோரி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரேவந்த் ரெட்டி அந்த நிகழ்ச்சியில் கூறியதாவது: ஹிந்துக்கள் எத்தனை கடவுள்களை நம்புகிறார்கள்..? மூன்று கோடி கடவுள்களா..? ஏன் இவ்வளவு பேர் இருக்கிறார்கள்..? திருமணமாகாதவர்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார் அவர் அனுமன். இரண்டு முறை திருமணம் செய்பவர்களுக்கு இன்னொரு கடவுள் இருக்கிறார் என்று பேசியுள்ளார்.
அத்துடன், மது அருந்துபவர்களுக்கு இன்னொரு கடவுள் இருக்கிறார். கோழி பலிக்கு ஒன்று இருக்கிறது; பருப்பிற்கும் அரிசிக்கும் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு குழுவிற்கும், அவர்களுக்கு சொந்த கடவுள் இருக்கிறார் என அவதூறாக பேசியுள்ளார்.

ஹிந்து மதத்தினரின் நம்பிக்கைகளை அவமதித்ததாகவும் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் பாஜ மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது குறித்து அம்மாநில பாஜ தலைவர் பிரவீன் கூறுகையில், ரேவந்த் ரெட்டியின் கருத்துக்களால் மாநிலம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் வெட்கப் படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், காங்கிரசுக்கும் ரேவந்த் ரெட்டிக்கும் வெட்கமில்லை என்றும், எல்லா கூட்டங்களிலும், முஸ்லிம்களால்தான் காங்கிரஸ் உருவாகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். முதல்வர் மன்னிப்பு கேட்டு தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், ரேவந்த் ரெட்டியை கடுமையாக சாடிய பிஆர்எஸ் தலைவர் ராகேஷ் ரெட்டி அனுகுலா கூறுகையில், 'ஹிந்து தெய்வங்களை கேலி செய்வது இப்போதெல்லாம் அனைவருக்கும் ஒரு பேஷனாகிவிட்டது' என்றும், கோடிக்கணக்கான ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ரேவந்த் ரெட்டி பேசுவது துரதிர்ஷ்டவசமானது. அவர் உடனடியாக ஹிந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தெலுங்கானா முதல்வர், ஹிந்து கடவுள்கள் குறித்து சர்ச்சையாக பேசி, சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் பாஜ மற்றும் ஹிந்து கடவுளை விமர்சிக்கும் வகையில் பேசிய ரேவந்த் ரெட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Strong condemnation against Telangana Chief Minister for his controversial remarks about Hindu gods again