சோஷியல் மீடியா நச்சு பீதி உடைந்தது...முட்டை குறித்த உண்மை வெளிச்சம்...! - FSSAI விளக்கம்
social media scare about toxic eggs debunked truth about eggs revealed FSSAI clarification
இந்தியாவின் முட்டை மற்றும் கறிக்கோழி உற்பத்தி வரைபடத்தில் முன்னணியில் மின்னும் மாவட்டம் – தமிழ்நாட்டின் நாமக்கல். நாமக்கல் மண்டலத்தில் சமீபகாலமாக முட்டை விலை கிடுகிடுவென ஏறிக்கொண்டே வருவதால், அதன் தாக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கர்நாடகத்தில் ஒரு கோழி முட்டை ரூ.8 வரை விற்பனையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில், கர்நாடகத்தில் விற்பனை செய்யப்படும் கோழி முட்டைகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சு ரசாயனம் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது. பலர் முட்டை சாப்பிடுவதையே தவிர்க்கத் தொடங்கினர்.மக்களின் அச்சத்தை போக்குவதற்காக கர்நாடக அரசின் சுகாதாரத்துறை உடனடியாக செயல்பட்டது.
பெங்களூரு, மைசூரு, மண்டியா, சிவமொக்கா, பல்லாரி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முட்டை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (FSSAI) அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
ஆய்வக பரிசோதனை முடிவுகள் வெளியாகியதும், மக்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டது. முட்டைகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் எந்தவிதமான ரசாயன நச்சுகளும் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்தது.
இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவிக்கையில்,“முட்டையில் புற்றுநோய் உண்டாக்கும் நச்சு இருப்பதாக பரவிய தகவல் மக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்கியது. அந்த அச்சத்தை நீக்குவதற்காக மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்து முட்டை மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினோம்.
தற்போது வந்துள்ள பரிசோதனை அறிக்கைகளின் படி, முட்டையில் எந்தவித ஆபத்தான ரசாயனங்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.முட்டை சாப்பிடுவது முழுமையாக பாதுகாப்பானது. பொதுமக்கள் எந்த அச்சமும் இல்லாமல் முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இதை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையமும் தெளிவுபடுத்தியுள்ளது” என்றார்.இதன்மூலம், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மக்களின் நம்பிக்கை மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
English Summary
social media scare about toxic eggs debunked truth about eggs revealed FSSAI clarification