மேகாலயாவில் சோகம்; சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து; 16 பேர் பலி; உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்..!
Sixteen people have died in an explosion at an illegal coal mine in Meghalaya
மேகாலயாவில் சட்டவிரோதமாக இயங்கிய நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேகாலயாவின் கிழக்கு ஜெய்ந்தியா மலை மாவட்டத்திலுள்ள தஷ்காய் பகுதியில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் இன்று அதிகாலை இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
குறித்த விபத்தில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அண்டை மாநிலமான அசாம் பகுதியைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என கூறப்படுகிறது. சுரங்கத்தில் சட்டவிரோதமாக Dynamite பயன்படுத்தி வெடி வைத்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வெடிப்பு மிகவும் பெரிதாக இருந்ததால் அருகிலுள்ள மலைகளும் அதிர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. தொலைதூர இடம், இடிபாடுகள் மற்றும் மோசமான வானிலை ஆகியவை தங்கள் மீட்பு பணிகளுக்கு தடையாக இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, மேகாலயாவில் நிலக்கரி சுரங்கங்களுக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ள போதிலும், இதுபோன்ற சட்டவிரோத சுரங்கச் செயல்பாடுகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Sixteen people have died in an explosion at an illegal coal mine in Meghalaya