தரவு பாதுகாப்பில் மெட்டாவுக்கு அதிர்ச்சி: ‘சட்டம் மதிக்காவிட்டால் இந்தியா விட்டு வெளியேறுங்கள்’ – நீதிமன்றம்
shock Meta data security Leave India if you dont respect law Court
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற முன்னணி சமூக ஊடகங்களை மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது.கடந்த 2021ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் புதிய தனியுரிமைக் கொள்கையின் மூலம் பயனாளர்களின் தகவல்கள் பேஸ்புக்குடன் பகிரப்பட்டதாகவும், இதன் மூலம் சமூக வலைதள சந்தையில் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாகவும் இந்திய போட்டி ஆணையம் (CCI) குற்றம் சாட்டியது.

இதனால் போட்டியாளரான பிற தளங்களுக்கு வணிக ரீதியில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மெட்டா நிறுவனத்திற்கு ரூ.213.14 கோடி அபராதம் விதித்து சிசிஐ உத்தரவிட்டதுடன், இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவில் கொள்கைகளில் திருத்தம் செய்யவும் எச்சரிக்கை விடுத்தது.
இதற்கு எதிராக மெட்டா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி சூர்யகாந்த் கடுமையாகக் கருத்து தெரிவித்தார்: “நுகர்வோரை அவர்களின் தனிப்பட்ட தரவை பகிர கட்டாயப்படுத்த முடியாது.
அவர்களின் தனியுரிமையுடன் எந்த நிறுவனமும் விளையாட முடியாது. இந்தியாவில் செயல்படும் தொழில்நுட்ப நிறுவனங்கள் நாட்டின் சட்டங்களுக்கு முழுமையாக இணங்க வேண்டும். எங்கள் குடிமக்களின் தரவின் ஒரு பகுதியைக் கூட அனுமதி இல்லாமல் பகிர முடியாது.
சட்டங்களை மதிக்காவிட்டால், நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகலாம்” என எச்சரிக்கை விடுத்தார்.மேலும், விசாரணை முடிவில், இந்த வழக்கில் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி இடைக்கால உத்தரவு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
English Summary
shock Meta data security Leave India if you dont respect law Court