'பழங்குடியினருக்காக நேரத்தை அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஓய்வுக்கு பிறகு எந்தப்பதவியையும் ஏற்க மாட்டேன்'; ஓய்வு பெற்ற கவாய் உறுதி..!
Retired Kawai has vowed not to accept any position after retirement
ஓய்வுக்கு பிறகு பழங்குடியினருக்காக எனது நேரத்தை அர்ப்பணிக்க விரும்புவதாகவும், ஓய்வுக்கு பிறகு எந்தப்பதவியையும் தான் ஏற்க மாட்டேன் என்பதில் தெளிவாக உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் இன்றுடன் (நவம்பர் 23) ஓய்வு பெற்றுள்ளார். இதன் போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்தித்த கவாய் கூறியதாவது:
ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு பிரச்சினையில் கிரீமிலேயர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தனது கடமையை செய்துவிட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது பாராளுமன்றமும், அரசும் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சமத்துவம் என்பது மக்கள் இடையே ஊடுருவ வேண்டும் என்றும், பல பட்டியல் சாதி குடும்பங்கள் வளர்ந்திருப்பதை நாம் கண்டிருக்கிறோம் எனவும், ஆனால், அவர்கள் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் கவாய் பதிலளித்துள்ளார்.

மேலும், கொலிஜீயம் மூலம் சாதகமான நியமனங்கள் மற்றும் முன்னாள் நீதிபதிகளின் உறவினர்களுக்கு சலுகை காட்டப்படுகிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், கொலீஜியத்தில் பரிசீலனைக்கு வரும் போது, ஒரு நீதிபதியின் உறவினர் பெயர் மொத்த நியமனங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் கூட எட்டாது என்றும், ஒருவர்,நீதிபதியுடன் தொடர்புடையவர் என்பதற்காக அவரது தகுதியை புறக்கணிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
அரசுக்கு எதிராக முடிவு செய்யாவிட்டால், அவர் சுதந்திரமாக செயல்படும் நீதிபதி அல்ல எனக்கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு கவாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், உயர்நீதிமன்றங்களுக்கு இடையே நீதிபதி இடமாற்றம் செய்யப்படுவது என்பது நிர்வாக பிரச்சினைகளை மனதில் வைத்து எடுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது ரத்தத்தில் சமூகப்பணி கலந்துள்ளது. பழங்குடியினருக்காக எனது நேரத்தை அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்றும், ஓய்வுக்கு பிறகு எந்தப்பதவியையும் நான் ஏற்க மாட்டேன் என்பதில் தெளிவாக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மன்னிப்பு என்பது இயற்கையாக எனது குணத்தில் இருக்கிறது என்றும், இதனால், காலணி வீசிய நபரை மன்னிக்க வேண்டும் என உடனடியாக முடிவு எடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு, தாழ்த்தப்பட்டவர்கள் பிரிவிலும் கிரீமிலேயர் பிரிவினரை கண்டறிவதற்கான கொள்கைகளை மாநில அரசு வகுக்க வேண்டும், என உத்தரவு பிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Retired Kawai has vowed not to accept any position after retirement