நாகப்பன் படையாட்சிக்கு மணிமண்டபம் - டாக்டர் ராமதாஸ்! நாகப்பன் படையாட்சி யார் தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


சத்தியாக்கிரக தியாகி காந்தியின் தோழர் நாகப்பன் படையாட்சிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவில் மட்டுமின்றி, தென் ஆப்பிரிக்காவிலும் போராட்டம் நடத்தியவர்களை சுதந்திர இந்தியாவின் தந்தையர் எனப் போற்றி வணங்குகிறோம். அதே போன்று, இந்தியர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்து மகாத்மா காந்தியுடன் கைகோர்த்து போராடி,  18ஆவது வயதில் வீரச்சாவடைந்த தமிழர் நாகப்பன் படையாட்சியின் வரலாறும் போற்றப்பட வேண்டும்.

1906 ஆம் ஆண்டு டிரான்சுவால் காலனி அரசாங்கம் (தற்போது தென் ஆப்பிரிக்கா) அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் ஏசியாடிக் பதிவு சட்டத்தை கொண்டுவந்தது. இச்சட்டம் இந்தியர்களை துன்புருத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் இருப்பதாகக் கூறிய காந்தி, இந்தியர்கள் அதனை எதிர்க்க அழைப்புவிடுத்தார். மகாத்மா காந்தியின் வடிவமைப்பில் உருவான உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் இதுதான். 1906 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டுவரை எட்டு ஆண்டுகள் இப்போராட்டம் நீடித்து கடைசியில் வெற்றி பெற்றது. அந்தவகையில் காந்தி வெற்றி பெற்ற முதல் போராட்டமும் இதுதான்.

‘‘இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்’’ என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றதால் 1909 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு மூன்று பவுண்ட் தண்டம் அல்லது 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும்,  தண்டத் தொகையைக் கட்டாமல் சிறைத் தண்டனையை ஏற்பதே சத்தியாகிரகப் போராட்டம் என்பதால் சிறைக்குச் சென்றார். சிறையில் கொடுமைப் படுத்தப்பட்டு, ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக ஜூன் 30 ஆம் நாள் வெளியில் வந்த நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் நாள் மரணத்தை தழுவினார். நாகப்பன் படையாட்சியின் 110&ஆவது நினைவு நாள் நாளை (06.07.2019) சனிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.   

சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் மகாத்மா காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும். தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது, நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று காந்தி கூறினார். தனது சகோதரர் இறந்த போது, நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல' என்றார்.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என விரும்பிய மகாத்மா காந்தி சாமி நாகப்பன் படத்தை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும்' என்றார். நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க்கில் ஒரு கல்வி உதவி நினைவு நிதியையும், சென்னை, மும்பை நகரங்களிலும் நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்று காந்தி கூறினார். 

‘‘நாகப்பன் கடைசி நிமிடம் வரை உயிரோடிருந்த ஒவ்வொரு நிமிடமும் சத்தியாகிரகப் போராட்டத்தை மட்டுமே பேசியதாக அவரோடு இருந்தவர்கள் கூறினார்கள். அவர் ஒருபோதும் சிறைக்கு சென்றதை நினைத்து வருந்தவில்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வதை அவர் பெருமிதமாகக் கருதினார். கற்றறிந்த கல்விமான்களால் தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போர் வெற்றிபெறவில்லை, மாறாக நாகப்பன் போன்ற வீரர்கள்தான் அதனை வெற்றியடைய வைத்தனர்’’ என்றும் மகாத்மா போற்றினார்.

மகாத்மா காந்தி 1914 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, இந்தியாவுக்கு திரும்புவதற்கு முன்பாக ஜொகனஸ்பர்க் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார். அதுதான் காந்தியின் கடைசி தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக, தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் கொள்கைக்காக முதன் முதலில் உயிரை தியாகம் செய்து அவரது இதயத்தில் நீங்கா இடம்பெற்றிருந்த சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை மத்திய, மாநில அரசுகள் போற்ற வேண்டும். சாமி நாகப்பன் படையாட்சியின் தியாக வரலாறு தமிழக பாடநூல்களில் பாடமாக வைக்கப்பட வேண்டும். நாகப்பனின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்கள் அரசின் சார்பில் போற்றப்பட வேண்டும். சாமி நாகப்பனின் அஞ்சல் தலை வெளியிடப்பட வேண்டும். நாகப்பன் படையாட்சியின் பூர்வீகப்பகுதியான மயிலாடுதுறையில் மணிமண்டபமும் திருவுருவச் சிலையும் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்" என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramadoss said build memorial hall to nagappan padaiyatchee who friend of Gandhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->